Published : 26 Mar 2020 06:25 AM
Last Updated : 26 Mar 2020 06:25 AM

டீக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவு; தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மறு உத்தரவு வரும்வரை தமிழகத்தில் டீக் கடைகளும் இயங்க தடை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகரகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தனியாக தேர்வு

கடந்த மார்ச் 24-ம் தேதி தமிழகம்முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அத்தேர்வில் சில மாணவர்கள் கரோனாநோய் தடுப்பு நடவடிக்கைகளால் தேர்வு எழுதச் செல்ல முடியவில்லை என்ற விவரத்தை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதை பரிசீலித்து, கடந்த மார்ச் 24-ம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறு ஒரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும் இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்றுவரை அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருதியும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, தேநீர் (டீ) கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்க மார்ச் 25-ம் தேதி (நேற்று) மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறையும் 9 முதல் பிளஸ் 2 வரைகாலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு நடைமுறையும் அமலில் உள்ளன. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் பிளஸ் 1 வகுப்புக்கு 3 பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக தள்ளி வைக்கப்பட்டது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுகின்றனர். எனவே, நடப்பாண்டு அசாதாரண சூழல் கருதி 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு தற்போது இந்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில்..

இதேபோல புதுச்சேரியிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x