எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. கல்லூரிகளின் சில பிரிவுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. கல்லூரிகளின் சில பிரிவுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை
Updated on
1 min read

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் சில படிப்புகளுக்கு மட்டும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள் அனைத்துத் தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அண்மையில் யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் சில பிரிவுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பி.எஸ்சி. (AHS), B.Optometry, B.A.S.L.P, AHS டிப்ளமோ, எம்.எஸ்சி., M.Optometry, எம்ஏஎஸ்எல்பி, எம்.பில்., முதுகலை மருத்துவ நிர்வாகம் மற்றும் AHS படிப்புகளில் PG டிப்ளமோ ஆகிய மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனினும், மேற்குறிப்பிட்ட படிப்புகளில் முதுகலை மருத்துவ நிர்வாகம் தவிர்த்து அனைத்துப் படிப்புகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

தேர்வை நடத்தும் கல்வி நிறுவனங்கள் அரசு வழங்கியுள்ள பொதுநல அறிவிப்புகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in