வீடுகளில் டியூஷன்?- ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

வீடுகளில் டியூஷன்?- ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
Updated on
1 min read

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடு, மையங்களில் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சில தனியார் பள்ளிகள், அரசு உத்தரவை மீறி இயங்குவதாகத் தகவல் வெளியானது. மேலும், தமிழகத்தில் வீடு, மையங்களில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை எடுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ''வீடுகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் ஆசிரியர்கள் சிலர் சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். மாணவர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குப் புறம்பாக மாணவர்களைத் திரட்டுவது தவறானது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களைத் திரட்டி பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in