அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: யுஜிசி அறிவிப்பு

அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: யுஜிசி அறிவிப்பு
Updated on
1 min read

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. எனினும் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று உ.பி. அரசு அறிவித்தது. அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ''மார்ச் 31-ம் தேதி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in