Published : 19 Mar 2020 10:01 AM
Last Updated : 19 Mar 2020 10:01 AM

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் வெளிநாட்டு மையங்களில் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அண்டார்டிகா மாகாணம் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் த்ரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதே தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வடகிழக்கு டெல்லித் தேர்வர்களுக்கான தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுகிறது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும். அதைத் தொடர்ந்து மார்ச் 31-ம் தேதி, புதிய தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் '' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x