Published : 18 Mar 2020 08:29 PM
Last Updated : 18 Mar 2020 08:29 PM

கரோனாவிடம் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி, பாலின, உருவ, நிற பேதமில்லாமல் கரோனா என்னும் வைரஸ் அனைத்து விதமான சமூகத்தின் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசுகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கரோனாவில் இருந்து காப்பது எப்படி? வெளியே சென்றுவரும் பெற்றோர்கள் என்ன முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்கலாம் உள்ளிட்ட சந்தேகங்கள் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் குண சிங், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பதிலளித்தார்.

''பெரியவர்களைப் போல குழந்தைகளும் பொதுவான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது. ஒப்பீட்டளவில் குழந்தைகளுக்கு அதிக அளவில் கரோனாவால் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது. அடிக்கடி கை கழுவச் சொல்வது, பாதுகாப்பான இடங்களில் விளையாட வைப்பது ஆகியவற்றில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மாஸ்க் அணிய வேண்டுமா?
சளி, காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் மாஸ்க் அணியத் தேவையில்லை. பரவி வரும் வதந்திகளைக் கேட்டு குழந்தைகளிடையே அச்சுறுத்தல் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது. எளிய மொழியில் அவர்களுக்குப் புரியும் விதத்தில் கரோனா குறித்து விளக்கலாம்.

கரோனாவோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்
பெரியவர்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும், காய்ச்சல் வரும். பிற வைரஸ்களால் இவை ஏற்படும். அதனால் எனது குழந்தைக்கு சளி, இருமல் இருக்கிறது, கரோனாவாக இருக்குமா என்று அஞ்ச வேண்டாம். உடனடியாக, அடித்துப் பிடித்து அவர்களை நெரிசல் மிகுந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.

குழந்தைகள் எங்கும் வெளியே போகவில்லை, கரோனா உள்ளவர்களுடன் தொடர்பில்லை எனும் பட்சத்தில் சாதாரண சளி, காய்ச்சலுக்கு வழக்கமான மருந்துகளைக் கொடுக்கலாம். இயல்பாக இருக்கிறார்கள் எனும் பட்சத்தில் ஒரு நாள் காத்திருக்கலாம். ஏனெனில் மருத்துவமனையும் கரோனாவுக்கான முக்கியப் பிறப்பிடமாக அமையலாம்.

அதே நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக குழந்தையின் உடல்நிலை இருக்கும்போது மருத்துவமனைகளை நாடலாம். பெற்றோருக்கு சளி, காய்ச்சல் இருந்து குழந்தைகளுக்கும் வந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் கூட்டமான மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

அவசியமில்லாமல் தொடாதீர்கள்
பெற்றோர்கள் குழந்தைகளின் கை, வாய், மூக்கு உள்ளிட்ட உடல் உறுப்புகளை அநாவசியமாகத் தொடக் கூடாது. பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வரும்போது கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். தும்முவது, இருமுவது ஆகியவற்றைக் கைக்குட்டை, துணிகளைக் கொண்டு செய்வது அவசியம். அப்போது குழந்தைகளிடம் இருந்து ஓரடியாவது தள்ளி இருக்க வேண்டும்.

குளிப்பதற்கும் கரோனாவுக்கும் சம்பந்தமில்லை
வெளியே சென்று வந்த பிறகு குளித்தால் போதும். குழந்தைகளிடையே விளையாடலாம், வழக்கம்போல இருக்கலாம் என்ற மனநிலை சிலரிடம் நிலவுகிறது. எனக்குத் தெரிந்து அதில் உண்மையில்லை. குளிப்பதற்கும் கரோனா தடுப்புக்கும் சம்பந்தமில்லை.

சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம்
குழந்தைகள் அதிகம் கூடக்கூடாது என்றுதான் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், வெளியே குழந்தைகளை சிறப்புப் பயிற்சிகளுக்கோ, வகுப்புகளுக்கோ அனுப்புவதோ கூடாது. முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே விளையாட வைக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகள்
அதிக அளவில் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். கைக்குழந்தை எனில் தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். கரோனாவுக்கென தனிப்பட்ட உணவு வகைகள் இல்லை. புரோட்டீன், சாதம், பருப்பு, கீரை, காய்கறி, பழங்கள், கிழங்கு வகைகள், பால், இறைச்சி, எண்ணெய் ஆகியவை கலந்த வழக்கமான சரிவிகித உணவு போதும். வாரமொரு முறை அல்ல, தினந்தோறும் இதை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இவற்றைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த பானம் என்று கூறும் தனியார் விளம்பரங்களை நம்பி, பெற்றோர் ஏமாறக் கூடாது. இயற்கையான நீராகாரங்கள்தான் நல்லது.

வைட்டமின் சி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமா?
உடலுக்கு வைட்டமின் சி தேவைதான் என்றாலும் அதனால் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடாது. சரிவிகித உணவே எதிர்ப்பு சக்திக்கான அடிப்படை'' என்று மருத்துவர் குணசிங் தெரிவித்தார்.

பெற்றோர் இந்த விடுமுறையை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, வெளியில் செல்லத் திட்டமிடாமல் இருப்பது நல்லது. சமூகப் புழக்கத்தைக் குறைப்பதன் மூலமே நோய்ப் பரவலைத் தணிக்க முடியும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவது, கலைப் பொருட்களை உருவாக்குவது, வாசிப்பை ஊக்குவிப்பது ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x