கரோனா: இமெயில், வாட்ஸ்அப் மூலம் கே.வி. பள்ளி தேர்வு முடிவுகள் 

கரோனா: இமெயில், வாட்ஸ்அப் மூலம் கே.வி. பள்ளி தேர்வு முடிவுகள் 
Updated on
1 min read

கரோனா பாதிப்புக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இமெயில், வாட்ஸ் அப் மூலம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 142 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூடுமிடங்களான ஷாப்பிங் மால், திரையரங்குகள் ஆகியவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் அனைத்தும் இமெயில், வாட்ஸ் அப் மூலம் வெளியாகும் என்று கே.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா சங்கதன் மூத்த அதிகாரி கூறும்போது, ''இந்த ஆண்டு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இமெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். இதுதொடர்பாக ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியரிடம் தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, கேட்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் கரோனா அச்சுறுத்தலை அடுத்து மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in