

10, 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுநாள் வரை தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான சட்டத்திருத்த மசோதாவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்லூரியில் தமிழ்வழியில் படித்ததாக சிலர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, இட ஒதுக்கீடு பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து 6-ம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் எனவும் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதைக் கொண்டே டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி உள்ளிட்ட தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் அரசு வேலைக்குள் நுழைவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசு எடுத்துள்ள முடிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.