மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரை புதுவை, காரைக்காலில் மார்ச் 31 வரை விடுமுறை: ‘கோவிட்-19’ தடுப்புக்காக கல்வித்துறை நடவடிக்கை

மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரை புதுவை, காரைக்காலில் மார்ச் 31 வரை விடுமுறை: ‘கோவிட்-19’ தடுப்புக்காக கல்வித்துறை நடவடிக்கை
Updated on
1 min read

கோவிட்-19 வைரஸால் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் வரும் 31 வரை ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழக கல்வி முறையை பின்பற்றி வரும் புதுச்சேரி கல்வித் துறையும் பள்ளிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில், பள்ளிகளில் காலை நேர வழிபாட்டுக்காக மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வை நடத்தக் கூடாது. பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட விழாக்களை மறு உத்தரவு வரும் வரை நடத்தக் கூடாது. வாட்டர் பெல் அடிக்கும்போது மாணவர்கள் தண்ணீர் குடிப்பது மட்டுமல்லாமல் கட்டாயமாக கைகளைக் கழுவ வேண்டும். இதற்கு தேவையான சோப்புகளை பள்ளியில் வாங்கி வைக்க வேண்டும். பள்ளியில் காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால், அந்த மாணவர்களையோ, ஆசிரியரையோ உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதில் பாதிப்பு இருந்தால் அந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் பள்ளிக்கல்வி இயக்குநர் ருத்ரகவுடு அனைத்து பள்ளிகளுக்கும் விடுத்துள்ள உத்தரவில், “புதுச்சேரியில் கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் வரும் 31-ம் தேதி வரை ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வகுப்புகளை நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in