Published : 12 Mar 2020 02:15 PM
Last Updated : 12 Mar 2020 02:15 PM

அன்புள்ள மாணவருக்கு!- 1: உனக்காக சில வரிகள்!

அர்ப்பணிப்பும் தனித்துவமும் மிக்க, தன்னிகரற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 88 பேருக்கு இந்து தமிழ் திசை, அண்மையில் 'அன்பாசிரியர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. அந்த அன்பாசிரியர்கள் மூலம் எதிர்கால சமூகத்தினருக்குத் தேவையான தகவல்களைக் கடத்த நினைத்தோம். அறிவுரையாக அல்லாமல், அன்புரையாக அதை ஒரு தொடர் வழியாகச் சொல்ல ஆசைப்பட்டோம்.

தற்போது 'அன்புள்ள மாணவருக்கு' எனும் தொடர் இங்கே உயிர் பெற்றிருக்கிறது. அதில் முதலாவதாக அன்பாசிரியர் விஜயலட்சுமியின் அன்புரை இங்கே..

''அன்புள்ள மாணவருக்கு!

இன்று உன்னிடம் சில வார்த்தைகள்... உனக்காக சில வரிகள்... இது நிச்சயமாக உன் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருக்கும்!

நம் அன்றாட வாழ்வில் தினமும் சிலவற்றைக் கடந்து செல்கிறோம். நமக்கு அருகிலேயே யாராவது ஒருவர் ஏதோ ஒரு நல்ல விஷயத்தைச் செய்கிறார்; யாரோ ஒருவர் சாதனை படைக்கிறார்; ஒருவர் தீமை செய்கிறார்.

தீமை செய்கிறவரை அடுத்த நிமிடமே கண்டிக்கும் நாம், நன்மை செய்தவரையோ அல்லது சாதனை செய்தவரையோ பெரிதாகப் போற்றுவது இல்லை. இது ஏன் என என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா?

அடுத்தவர் செய்யும் தீமை நம்மை உடனடியாகப் பாதிக்கிறது. ஆகவே நாம் உடனுக்குடன் அதற்கு வினையாற்றுகிறோம். ஆனால் மற்றவர் செய்யும் நல்ல செயலோ அல்லது அடுத்தவர் செய்யும் சாதனையோ நம்மை பாதிப்பதில்லை. காரணம் அது அடுத்தவரின் சாதனை. அதனால் நமக்கு என்ன லாபம் அல்லது நஷ்டம் என்ற எண்ணமே இதற்குப் பின்னிருக்கும் உளவியல் ரீதியான காரணம்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால் நமக்கு நன்மை விளைவிக்கக் கூடியவை அடுத்தவரின் சாதனைகளே! ஆம், பிறரின் சாதனைகளை நாம் மனம் திறந்து பாராட்டும்போது, அது அவர்களுக்கு மட்டுமின்றி நமக்கும் மனநிறைவைத் தரும். அத்துடன் நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தரும்; நம்மிடம் இருக்கும் திறமை என்ன எனத் தேட வைக்கும்; நம் வெற்றிக்கு என்னென்ன காரணிகள் தடையாக இருக்கின்றன என ஆராயச் சொல்லும்; நம் பலம், பலவீனம் ஆகியவற்றை எடை போடச் சொல்லும்; மொத்தத்தில் நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வகை செய்யும்.

ஆனால் மற்றவரின் எதிர்மறையான வார்த்தைகளுக்கோ அல்லது செயல்களுக்கோ நாம் எதிர்வினையாற்றும் போது நமக்கு எந்த நன்மையும் விளைவதில்லை. மாறாக நம் மனம் வருத்தப்படும்; உறக்கம் கெடும்; நாம் முடிக்க வேண்டிய செயல்களில் நாட்டம் குறையும்; உடல் நலம் குன்றும்; உடல் உள்ளுறுப்புகள் முதல், ஹார்மோன்கள் வரை அனைத்தும் பாதிப்படையும்.

இதைத்தான் நம் முன்னோர்கள் நல்லதை நினை; நல்லதே செய்! என கூறியிருக்கின்றனர்.

ஆகவே நல்ல விஷயங்களை உடனுக்குடன் பாராட்டப் பழகு; தீய செயல்களுக்கு, தாமதித்து எதிர் வினையாற்று. இப்படி செய்வதால் வினையாற்றுதல் குறைவாக இருக்கும் அல்லது வினையாற்றவே மறந்து, நீ சிக்கலில்லாமல் நிம்மதியாக இருப்பாய்!''

- D.விஜயலட்சுமி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x