Published : 12 Mar 2020 07:55 AM
Last Updated : 12 Mar 2020 07:55 AM

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டப்பயிற்சி முகாம்: தேர்வான மாணவர் பட்டியல் வெளியீடு

சென்னை

இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு தற்காலிகமாக தேர்ச்சி பெற்ற 368 பள்ளி மாணவ, மாணவிகளின் பட்டியலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 5-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1.52 லட்சம் பள்ளி மாணவர்கள் வரை விண்ணப்பித்தனர். அவர்களில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் தலா 10 பேர் வீதம் தற்காலிகமாக 368 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரப் பட்டியல் இஸ்ரோ இணையதளத்தில் (www.isro.gov.in ) நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து தேர்ச்சி பெற்றுள்ள 368 மாணவர்களும் தங்கள் 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உட்பட ஆவணங்களை மார்ச் 16 முதல் 26-ம் தேதிக்குள் மேற்கண்ட இஸ்ரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதன்பின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும். அதாவது தற்காலிக பட்டியலில் இருந்து தகுதியான 113 பேர் ‘யுவிகா’ பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 080 2217 2269 தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x