Published : 09 Mar 2020 08:46 AM
Last Updated : 09 Mar 2020 08:46 AM

கணக்கீட்டாளர், உதவியாளர் பணிக்கு தமிழ் வழியில் ஆன்லைன் தேர்வு: தமிழக மின்சார வாரியம் திடீர் அறிவிப்பு

சென்னை

கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு தமிழ்வழியிலும் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படும் என்றும் இத்தேர்வுக்கு மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் திடீரென அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்தில் இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில்500 காலியிடங்களும் கணக்கீட்டாளர் பதவியில் 1,300 காலியிடங்களும் உள்ளன. இவை போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முதலில் ஆன்லைன் தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆன்லைன் தேர்வை தமிழ்வழியிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வானது தமிழ்வழியிலும் நடத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன்தலைமை பொறியாளர் (பணியமைப்பு) நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் மார்ச் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.tangedco.gov.inஎன்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கணக்கீட்டாளர் பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டிவகுப்பினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், இளநிலை உதவியாளர் பதவிக்கு பி.காம். பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும்.

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு ஏதும் கிடையாது. உரிய கல்வித் தகுதியும், வயது தகுதியும் உடைய பட்டதாரிகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள், நேரம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x