Published : 06 Mar 2020 08:28 AM
Last Updated : 06 Mar 2020 08:28 AM

ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கு ஜூன் 1, 2-ம் தேதிகளில் நுழைவுத்தேர்வு: மார்ச் 31-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க் கைக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் 31-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உத்ராகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2020-ம்ஆண்டு ஜனவரி பருவத்தில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுன் 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வுநடைபெறும். இது, எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு எனஇரண்டு தேர்வுகளைக் கொண்டது.எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு ஆகியதாள்கள் இடம்பெறும்.

எழுத்துத் தேர்வில் பெற்றமதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறும்.

தகுதிகள்

ராணுவக் கல்லூரியில் சேர 1.1.2021 அன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு முடித்தவராகவோ இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பதினொன்றரை வயதுக்கு குறையாமலும் 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய ஆண்டு தேர்வுவினாத்தாள் தொகுப்பு ஆகியவற்றைப் பெற ‘கமாண்டென்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்ராகண்ட் - 248 003’ என்ற முகவரிக்கு ரூ.600-க்கான டிமாண்ட் டிராப்டை (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.555) கோரிக்கை கடிதத்துடன் விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

டிமாண்ட் டிராப்ட் ‘கமாண் டென்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகவும் (www.rimc.gov.in) செலுத்தலாம்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விண்ணப்பம் ஏதும் வழங்கப்படாது. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்தை ‘தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்காநகர், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதி மாலை 5.45-க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த நுழைவுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x