Published : 06 Mar 2020 08:10 AM
Last Updated : 06 Mar 2020 08:10 AM

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி ஒலிபெருக்கிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா?- பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்தை பின்பற்றி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி ஒலிபெருக்கிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு 4-ம் தேதியும் தொடங்கி உள்ளன. 17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். 10-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ போன்ற மத்திய கல்வி நிறுவனங்களுக்கான பொதுத் தேர்வும் நடைபெற்று வருகின்றது.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தமிழகத்தில் ஏற்கெனவே தடை அமலில் உள்ளபோதிலும், அது முறையாக பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் இந்நேரத்திலாவது, தடையை முறையாக பின்பற்றவேண்டும் என்று ஆசிரியர்களும் பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி மேற்குவங்கம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களை பின்பற்றி பொதுத் தேர்வின் போதாவது, வழிப்பாட்டு தலங்கள், திருவிழாக்கள், திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்கவேண்டும் என்று பெற்றோரும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் கூறும்போது, “இயற்கையாகவே மனித செவிப்பறையால் 20 முதல் 20,000 ஒலி அதிர்வெண் (ஹெர்ட்ஸ்) வரை கேட்க முடியும். வயது மற்றும் தனிப்பட்ட கேள் தகவுக்கும் ஏற்ப ஒலி அதிர்வெண் உணர்வில் மாற்றம் ஏற்படும். அதன்படி, 12 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்களுக்கு செவித்திறன் அதிகமாக இருக்கும். இதனால், சிறிய சத்தத்தைக்கூட அவர்களால் உணர முடியும். ஒலிபெருக்கியில் இருந்து வரும் அதிர்வெண்ணின் அளவானது தூரம் மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மாறுபடும்.

அதிகாலை, மதியம், இரவு போன்ற வேளைகளில் 3 கி.மீ சுற்றளவில் இயங்கும் ஒலிபெருக்கியின் சத்தம்கூட 15 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்களுக்கு கேட்கும். அப்போது, அமைதியான இடத்தில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு நிச்சயம் கவனச்சிதறலை ஏற்படுத்தும். நிசப்தமாக இருக்கும் ஒரு அறையில் 20 ஹெர்ட்ஸ் கீழாக இருக்கும் ஒலியைக்கூட மனிதர்களால் உணர முடியும். அதுவே, 500 மீட்டர் சுற்றளவில் 80 டெசிபல் அளவுக்கு சத்தம் வந்தால் மாணவர்களால் புத்தகத்தை வாசிக்கக்கூட முடியாது” என்றார்.

இதுகுறித்து பெற்றோர் மாணவர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன் கூறியதாவது:

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கவனம் சிதறும் வகையில், ஒலிபெருக்கியின் சத்தம் உள்ளது. பொதுத் தேர்வு நடக்கும் தேர்வு மையங்களை சுற்றியிருக்கும் பகுதி களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், தேர்வு முடியும் வரை ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு பொதுவான தடையை அரசுதான் அமல்படுத்தவேண்டும். கிராமப்புறங்களில் காலை 5 மணி முதல் வழிபாட்டு தளங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது.

அதிகாலையில்தான் மாணவர்கள் அதிகமாக படிப்பார்கள். அந்த சமயம் ஒலிபெருக்கி சத்தம் கேட்டால் மாணவர்களால் படிக்க முடியாது. எனவே, தேர்வு முடியும்வரை ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு அரசு தடை விதிக்கும் முன்பாகவே, ஊர் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யவேண்டும். நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஒலிபெருக்கியை தேர்வு முடியும்வரை பயன்படுத்தாமல் இருக்க நாம் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x