Published : 04 Mar 2020 03:23 PM
Last Updated : 04 Mar 2020 03:23 PM

நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள்

அந்த ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் அடைகின்றனர். ஏனென்றால் ஆட்சியர் அறையில் சீருடை அணிந்த இளம் பெண்கள், கம்பீரத்துடன் உட்கார்ந்து அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

புல்தானா மாவட்டத்தின் ஆட்சியர் அறையில்தான் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அங்கு ஆட்சியராகப் பணியாற்றும் சுமன் சந்திராவுக்கு என்ன ஆனது?

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு துடிப்பான, திறமையான பள்ளி மாணவிகளை ஒருநாள் ஆட்சியராகப் பணியமர்த்த முடிவெடுத்தார் சந்திரா.

இதற்காக தற்போது நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர மாவட்டம் ஒன்றில், பள்ளி மாணவிகள் சிலர், 'ஒரு நாள் இளம் ஆட்சியர்' ஆகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களை உற்சாகப்படுத்தி, உத்வேகம் அளிக்க முடியும் என்கிறார் ஆட்சியர் சுமன் சந்திரா.

பாடொலி ஜில்லா பரிஷத் பள்ளியில் படிக்கும் பூனம் தேஷ்முக் என்னும் 13 வயது சிறுமி, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 2) அன்று ஒரு நாள் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேபோல செவ்வாய்க்கிழமை அன்று யோகிதா மாகர் என்னும் 14 வயது சிறுமி ஆட்சியர் ஆனார். இதுகுறித்து ஆட்சியர் சுமன் சந்திரா கூறும்போது, ''அவர்களை முறைப்படி என்னுடைய அலுவலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என்னுடைய இருக்கையில் அமரச் சொன்னேன். பூனம் உள்ளூர் ஊடகங்களுடன் தைரியமாகப் பேசினார். மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஞாயிறு அன்று பெய்த பருவமில்லாத மழைப் பொழிவு குறித்து கவலை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேபோல யோகிதா சாலைக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார், உள்ளூர் மக்களைப் பாதிக்காத வகையில் தூசிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டுமான ஒப்பந்ததாரர்களைக் கேட்டுக் கொண்டார்.

நாளின் முடிவில் தன்னுடைய அனுபவம் குறித்தும் ஆட்சியர் அனுபவம் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்ததா என்றும் கடிதம் எழுதித் தரக் கூறினேன். மாணவிகள் நம்பிக்கை அதிகரித்திருந்ததை கடிதங்களின் மூலம் உணர முடிந்தது'' என்கிறார் ஆட்சியர் சுமன் சந்திரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x