Published : 04 Mar 2020 12:34 PM
Last Updated : 04 Mar 2020 12:34 PM

நம்ம ஊரு விஞ்ஞானி: அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் விருது விழா- மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

நம்ம ஊரு விஞ்ஞானி என்ற பெயரில் நடைபெற்ற அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் விருது விழாவில் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்கம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் வாங்க பேசலாம்- நம்ம ஊர் விஞ்ஞானி என்ற தலைப்பில் அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் அறிவியல், கலை, இலக்கியத் துறைகளில் சிறப்பாகச் செயல்படும் ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு, உடுமலை ஆர்.கே.ஆர் கல்வியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் கு.சி.மணி வரவேற்றார். ஆர்.கே.ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.கே. ராமசாமி தலைமை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் பல்வேறு முன்னேற்றங்கள் பற்றியும், 2020-ல் இந்தியா பொருளாதாரத்தில் பெற்றுள்ள முன்னேற்றம் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். கலாம் கனவை நாம் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணாக்கர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பூமியில் மக்கள் வாழ்வது போல வேறு கிரகத்தில் வாழ முடியுமா? பறக்கும் தட்டு என்பது உண்மையா? பிளாக் ஹோல் கருப்பாக இருக்குமே, எப்படி அதை நிழல் படம் எடுக்க முடியும்? உங்களுக்கான அறிவியல் விதை எங்கே முளைத்தது? இந்தியா வல்லரசாக என்ன செய்ய முடியும்? தமிழ் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க முடியுமா ? உங்களைப் போல ஆக நான் என்ன படிக்க வேண்டும்? விளையாட்டுத் துறையில் சிறப்பாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் போல அறிவியல் துறையிலும் சிறப்பாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டைத் தரலாமா? நியூட்ரினோ மையம் தேவையான ஒன்றா? போன்ற மாணாக்கர்களின் பல்வேறு வகையான அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் ரவி ஆனந்த் செயலாளர் சத்யம் பாபு மற்றும் உடுமலை அரிமா சங்க தலைவர் பன்னீர்செல்வம் உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன் நிர்வாகி சசிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விருது விழா
உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் சிறந்த தலைமையாசிரியர்களுக்கான விருது , ஆசிரியர்கள் மற்றும் இளம் ஆசிரியர்களுக்கான விருது, மாணாக்கர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான விருது, சிறந்த சமூக அமைப்புகளுக்கான விருது, சிறந்த நூலுக்கான விருது, அறிவியல் விழிப்புணர்வில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கான விருது ஆகிய தலைப்புகளில் 40 சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.

நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x