Published : 04 Mar 2020 07:47 AM
Last Updated : 04 Mar 2020 07:47 AM

தவறான விளம்பரங்களை நம்பாதீர்கள்; அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள்- பெற்றோருக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

சென்னை

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு சம்பந்தப்பட்ட பள்ளிஉரிய அங்கீகாரத்துடன் செயல்படுகிறதா என்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும். தவறான விளம்பரங்களை நம்பக்கூடாது என்று சிபிஎஸ்இ வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய இடைநிலை கல்விவாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும்கல்வியாண்டுக்கான (2020-21)மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தவறாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, விளம்பரங்களால் கவரப்பட்டு, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோரை சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் கல்வியாண்டுக்காக சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பங்கள் தற்போதுபரிசீலிக்கப்பட்டு வருகின்றன.அதில் சில பள்ளிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். சிலபள்ளிகள் விண்ணப்பிக்காமலே கூட இருக்கலாம். எனவே, முறைப்படி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளியில்தான் பிள்ளை களை சேர்க்கிறோமா என்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத சில பள்ளிகள், மக்களை குழப்பும் விதமாக, ‘சிபிஎஸ்இ வழிக் கல்வி’, ‘சிபிஎஸ்இ உடன் இணைந்த பள்ளி’ என்று பல்வேறு விதமாக விளம்பரம் செய்கின்றன. எனவே, பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது.

பள்ளிகள் குறித்து சந்தேகம்ஏற்பட்டால் அதன் விவரங்களைwww.cbseaff.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். அதில் மண்டல, மாநில வாரியாக சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விவரம் உள்ளன. மண்டல அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்குமாறு அவர் களை அறிவுறுத்தி உள்ளோம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x