Published : 02 Mar 2020 05:47 PM
Last Updated : 02 Mar 2020 05:47 PM

பிளஸ் 2 தமிழ் வினாத்தாளில் கேள்விகள் எளிமை: மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வினாக்களுக்கு வரவேற்பு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

தமிழகம் முழுவதும் இன்று நடந்த பிளஸ் 2 தமிழ் வினாத்தாளில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலக்கணத்திலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மேலும், மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வகையிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

நடப்பாண்டில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, தேர்வு முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு தொடங்கியது.

இதுவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் முதல் தாள், இரண்டாம் தாள் என இருநாட்கள் தேர்வுகள் நடைபெறும். நடப்பாண்டு முதல் தமிழ்மொழிப் பாடத்தில் இலக்கணம், செய்யுள், உரைநடை ஆகிய பாடங்கள் ஒரே தாளாக ஆக்கப்பட்டது. அக மதிப்பெண் 10 போக 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு இன்று நடந்த தமிழ்மொழிப் பாடத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் எனவும், மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறியதாவது: தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்காலங்களில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலக்கணப் பாடங்களிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனில் அக்கறை கொள்ளும் வகையிலும் கேள்விகள் இருந்தது வரவேற்கத்தக்கது, என்றனர்.

இதுதொடர்பாக தமிழாசிரியர் நீ.இளங்கோ கூறியதாவது: "தமிழ் வினாத்தாள் எளிமையாக இருந்தது. உரைநடை, செய்யுள் தவிர இலக்கணத்திலிருந்து அதிகமான கேள்விகள் இடம்பெற்றது மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் முன்னேற்பாடாகும். அதில் நெடுவினாக்களில், நெகிழி தவிர்த்து, நிலத்தை நிமிர்த்து என்ற வினா சமூக அக்கறையோடு கேட்கப்பட்டிருந்தது.

அடுத்தது, சாலை விபத்தில்லா தமிழ்நாடு- இக்கூற்றை நனவாக நாம் செய்ய வேண்டியவன யாவை என்ற வினாவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

மேலும், நடிகர் திலகம் என்ற பட்டம் சிவாஜிக்கு பொருத்தமானதே என்பதை நிறுவுக என்ற வினாவும் வரவேற்கத்தக்கது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x