Last Updated : 02 Mar, 2020 04:58 PM

 

Published : 02 Mar 2020 04:58 PM
Last Updated : 02 Mar 2020 04:58 PM

அரசுப் பள்ளி மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் 

சிவகாசி

அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் 20 பேரை தலைமை ஆசிரியர் ஒருவர், தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மங்கலம் கிராமம் உள்ளது. இங்கு அரசுத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 64 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் 20 மாணவர்களையும், 4 ஆசிரியர்களையும் தனது சொந்தச் செலவில் சென்னைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு தனது சொந்த செலவில் அழைத்து வந்துள்ளார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன்.

இதுகுறித்துத் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ''கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பெற்றோருடன் திருமணம் மற்றும் உறவினர்கள் இல்ல விழாக்களுக்குச் செல்வதற்காக மாணவ, மாணவிகள் அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வது வழக்கம். இதைத் தடுக்கவும், மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கும் விதமாகவும், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் 5-ம் வகுப்பு மாணவர்கள் ரயில் மற்றும் விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்தேன்.

அதன்படி, கடந்த 4 மாதங்களாக 5-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேரும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். உடல்நிலை பாதிப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே ஓரிரு மாணவர்கள் விடுமுறை எடுத்தனர். இதனால் அனைத்து மாணவர்களும் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்துவற்காக, 5-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேரையும் எனது சொந்தச் செலவில் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வாடகை வேன் பிடித்து இரு நாள்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்தோம். அதன்பின், எனது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து மதுரைக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் விமானத்தில் அழைத்து வந்தேன்.

கிராமப்புற மாணவர்கள் பலர் ரயிலில்கூட சென்றதில்லை. ரயிலில் சென்றபோதும், விமானத்தில் வந்தபோதும் மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கும் மனநிறைவாக இருந்தது. சென்னை சென்று வர சுமார் ரூ.1.20 லட்சம் வரை செலவானது. ஆனாலும் அதில் ஒரு திருப்தி கிடைத்தது. மாணவர்களுக்கு இப்பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத முதல் விமானப் பயணமாக அமைந்தது.

இதேபோன்று, மற்ற வகுப்பு மாணவர்களும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களையும் ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று வரவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தைத் தூண்ட, முதலில் அவர்களை விடுப்பின்றிப் பள்ளிக்கு வரவைப்பதே முதல் வெற்றி'' என்று புன்னகைக்கிறார் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x