Published : 29 Feb 2020 02:33 PM
Last Updated : 29 Feb 2020 02:33 PM

பொதுத் தேர்வு: முறைகேட்டைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தேர்வுத் துறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதியும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதியும் தொடங்க உள்ளன. இந்நிலையில், பொதுத்தேர்வில் முறைகேட்டைத் தடுக்க அரசு தேர்வுத் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்விற்காக 296 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காவண்ணம் செம்மையாக நடத்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 4000 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆய்வு அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர், அம்மாவட்டத்திலுள்ள அனைத்துத் தேர்வு மையங்களையும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு தேர்வு நாட்களின்போது தங்களுடன் கண்காணிப்புக் குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதுவும் நடைபெறா வண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அலைபேசி தடை
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியைக் கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீனச் செயல்பாடுகள்
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ / பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாகக் கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திட பள்ளிக் கல்வி/ மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x