Published : 29 Feb 2020 07:30 AM
Last Updated : 29 Feb 2020 07:30 AM

குரூப்-4 முறைகேடு விவகாரத்தால் புதிய தேர்வு அறிவிப்புகளை வெளியிடுவதில் தாமதம்- தேர்வர்கள் ஏமாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் முறைகேடு விவகாரத்தால், புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்வு காலஅட்டவணைப்படி ஜனவரியில் நடக்க வேண்டிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

அரசுப்பணிக்காக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இந்த போட்டித் தேர்வர்களுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிடுகிறது. முன்கூட்டியே தேர்வர்கள் தயாராகும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான அட்டவணைப்படி, ஜனவரி மாதத்தில் குரூப்-1, உதவி வேளாண் விரிவாக்க அலுவலர் தேர்வு, தோட்டக்கலை உதவி இயக்குநர் தேர்வு, உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருக்க வேண்டும்.

இதில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20-ல் வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. பிப்ரவரி நிறைவடையும் நிலையில் இந்த மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த இன்ஜினீயரிங் பணி தேர்வுக்கும் அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு செப். 1-ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்கள் பலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் இடைத்தரகர் ஜெயக்குமார் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரம் காரணமாகவே புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் 17-க்கு மேல்..

இதற்கிடையே, சர்ச்சைக்குள்ளான குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கலந்தாய்வு மார்ச் 17-ம் தேதி நிறைவடைகிறது. இதன்பிறகே, அடுத்தடுத்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x