Published : 28 Feb 2020 04:34 PM
Last Updated : 28 Feb 2020 04:34 PM

டெல்லி அரசுப்பள்ளி ஆசிரியையின் ட்வீட்டைப் பகிர்ந்த மெலானியா ட்ரம்ப்

டெல்லி அரசுப்பள்ளி ஆசிரியையின் ட்வீட்டைப் பகிர்ந்த மெலானியா ட்ரம்ப், அவரை உத்வேக வழிகாட்டி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா இருவரும் அண்மையில் இந்தியா வந்தனர். பயணத்தின் ஒரு பகுதியாக, மெலானியா பிப்.25 அன்று தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா சர்வோதயா அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்றார். அங்குள்ள பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து மெலானியாவை வரவேற்றனர். தாங்கள் வரைந்த ஓவியங்களைப் பரிசாக வழங்கினர்.

அங்குள்ள வகுப்புகளுக்குச் சென்ற அவர், மகிழ்ச்சிகரமான பாடத் திட்டம் இயங்கும் விதம் குறித்துக் கேட்டறிந்தார். தற்போது அனைத்து டெல்லி அரசுப் பள்ளிகளிலும் மழலையர் பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை மகிழ்ச்சிகரமான பாடத்திட்டம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகள் தினந்தோறும் 45 நிமிடங்கள் என வாரத்துக்கு 6 நாட்கள் எடுக்கப்படுகின்றன. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் வகுப்புகள் இங்குண்டு.

டெல்லியில் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், மெலானியாவின் வருகை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து மனு குலாட்டி என்னும் சர்வோதயா அரசுப் பள்ளி ஆசிரியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் தன் பதிவில், ''எங்கள் டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கையைப் பாருங்கள். அவர்கள் மெலானியா ட்ரம்ப்பின் முன்னால் நடனமாடினர். அவர்கள் தங்களின் வாழ்க்கையை, அன்புடன் ரசித்து வாழப் பழகிவிட்டனர்'' என்று தெரிவித்திருந்தார்.

இதை ரீட்வீட் செய்துள்ள மெலானியா ட்ரம்ப், ''உங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியைக் காண ஆனந்தமாக உள்ளது. உன்னதமான உதாரணமாகவும் உத்வேக வழிகாட்டியாகவும் இருக்கிறீர்கள், நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x