Last Updated : 28 Feb, 2020 07:39 AM

 

Published : 28 Feb 2020 07:39 AM
Last Updated : 28 Feb 2020 07:39 AM

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரிடம் வேண்டுகோள்- வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழாசிரியை

பல்லகச்சேரி கிராமத்தில் பெற்றோரிடம் ஆலோசனை வழங்கும் தமிழாசிரியை துரை.மணிமேகலை.

விருத்தாசலம்

ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று பெற்றோரிடம் தேர்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, மாணவர்களைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகிறார் தமிழாசிரியை ஒருவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் பாடப்பிரிவில் முதுநிலை ஆசிரியையாக பணிபுரிபவர் துரை.மணிமேகலை. இவரது கணவர் அமுதன் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியான கல்வராயன்மலையில் உள்ள பரிகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக மாணவர்களின் இல்லங்களுக்கு தனது ஒரு வயதைக் குழந்தையுடன் செல்லும் ஆசிரியை மணிமேகலை, அம்மாணவரின் பெற்றோரை சந்தித்து பேசுகிறார்.

‘‘உங்கள் குடும்பச் சூழல் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் உங்கள் பிள்ளைகள் தற்போது முக்கியமானதை கடந்து செல்ல வேண்டிய தருணம்.எனவே அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து. பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். தேர்வு சமயத்தில் அவர்கள் உணவுஉட்கொள்ளும்போது, உறங்கும்போது உடனிருந்து கவனித்துக் கொள்ளுங்கள்'' என்று அறிவுரை வழங்கி வருகிறார்.

ஆசிரியரின் இந்த அணுகுமுறையால் குதிரைசந்தல் கிராமப் புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது தொடர்ந்து சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று வருகின்றனர்.

இதுபற்றி ஆசிரியை துரை. மணிமேகலையிடம் கேட்டபோது, ‘‘ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கடந்த வாரம் முடிந்து விட்டது. இதையடுத்து பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதுண்டு. மாணவர்களை குறைகூற முடியாது.

கிராமப்புற மாணவர்களின் சூழலை நன்கு அறிவேன். வருமானத்துக்காக பெற்றோர் வேலைக்குச் சென்று விடுவர். பிள்ளைகளை கவனிக்க முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். வீட்டில் உள்ள வேலைகளையும் பிள்ளைகளே செய்ய வேண்டும். பெண் பிள்ளையாக இருந்தால், வீட்டு வேலைச் சுமை அதிகம்.

இதுதொடர்பாக சில மாணவ- மாணவியர் ‘‘எங்கள் வீட்டில் வந்து பேசுங்கள்'’ எனக் கேட்டுக் கொண் டனர்.

இதைத் தொடர்ந்து, தனிப்பட்ட முறையில் நானே மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரிடம் பேசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது மாண வர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x