

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட நாடு முழுவதும் 100 இடங்களில் இஸ்ரோ விண்வெளி மையம் அறிவியல் கண்காட்சி நடத்தவுள்ளது என இஸ்ரோ உந்து சக்தி மைய இயக்குநர் அழகுவேல் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இஸ்ரோ மகேந்திர கிரி உந்து சக்தி மையம் மற்றும் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி இணைந்து பிப்.27 முதல் 3 நாட்களுக்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்வெளி கண்காட்சியை நடத்துகின்றன.
கண்காட்சியை மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு இஸ்ரோ மகேந்திரகிரி உந்து சக்தி மைய இயக்குநர் கே.அழகுவேலு தலைமை வகித்துப் பேசினார். துணை பொது மேலாளர் டி.பெருமாள் வரவற்றார்.
கண்காட்சியில் ஆப்பிள், ஆரியபட்டா முதல் சந்திரயான்-2 வரை உள்ளிட்ட செயற்கோள்கள், பல்வேறு ராக்கெட்டுகள் அதன் மாதிரிகள், செயல்பாடுகள் மற்றும் விகாசா இன்ஜின், கிரையோஜெனிக் இன்ஜின் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தென் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் முதன் முதலாக இஸ்ரோ சார்பில் நடைபெறும் விண்வெளி கண்காட்சியை பார்ப்பதற்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.
விண்வெளி ராக்கெட்டுகள், இயந்திரங்கள், செயற்கைகோள்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு விளக்கினர்.
ராக்கெட்டுகள் சந்திரயான்-2, மங்கள்யான், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், சூரிய ஆராய்ச்சி திட்டம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதுவரை 92 இந்திய செயற்கைகோள்கள், 209 வெளிநாட்டு செயற்கை கோள்கள், 9 மாணவர் செயற்கை கோள்கைகள் விண்ணில் செலுத்தியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இஸ்ரோ மகேந்திர கிரி உந்து சக்தி மைய இயக்குநர் அழகு வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, ”விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா 2019 ஆகஸ்ட் 12 முதல் 2020 ஆகஸ்ட் 12 வரை கொண்டாடப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் நாடு முழுக்க இஸ்ரோவால் 100 இடங்களில் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விண்வெளி கண்காட்சி விழிப்புணர்வுகள் நடத்தப்படவுள்ளது.
இதில் இஸ்ரோ மகேந்திர கிரி உந்து சக்தி மையம் 6 இடங்களில் விண்வெளி கண்காட்சியை நடத்த திட்டமிட்டு, முதலாவதாக திருநெல்வேலியிலும், 2-வதாக மதுரையிலும் நடத்தியுள்ளது. இதன் நோக்கம் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்பட்டு சாதிக்க வேண்டும் என்பதே.
திட எரிபொருள் ராக்கெட் இன்ஜின்கள் தயாரிப்பதில் உலகில் இந்தியா 2-வது நாடாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதாக ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக குறித்த நேரத்தில் இஸ்ரோ அறிவிக்கும்” என்றார்.
வேலம்மாள் கல்விக்குழும துணைத்தலைவர் கணேஷ் நடராஜன் நன்றி கூறினார்.