Published : 27 Feb 2020 01:56 PM
Last Updated : 27 Feb 2020 01:56 PM

பொறியியல் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்புப் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி

பொறியியல் கல்வித் தரத்தை உயர்த்த 5 ஆண்டுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி எடுக்கவேண்டும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிகள் அடங்கிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை ஏஐசிடிஇ அண்மையில் வெளியிட்டது. அதில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 30 சதவீதத்துக்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் 50 சதவீத இடங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் 1:15 விகிதமும் அரசுக் கல்லூரிகளில் 1:20 விகிதமும் ஆசிரியர்கள்-மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ நிபந்தனைகள் விதித்திருந்தது.

ஆசிரியர்-மாணவர் வீத மாற்றத்தால் கணிசமான பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் 1:15 விகிதத்தைப் பின்பற்ற, கல்லூரிகளுக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி, ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. அதேபோல, முதுகலை பொறியியல் முடித்து 5 ஆண்டுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்டவர்கள், 8 பிரிவுகளில் சிறப்புப் பயிற்சிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதனால், புதிய கற்றல் முறை, அறிவுப் பரிமாற்றம், நற்பண்பு வளர்ச்சி போன்றவை ஆசிரியர்களிடத்தில் நிகழும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு ஏராளமான ஆசிரியர்கள், தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x