Published : 27 Feb 2020 10:02 AM
Last Updated : 27 Feb 2020 10:02 AM

சிரியா உள்நாட்டுப் போரின் இன்னொரு முகம்: குண்டு பொழியும்போது மகளுடன் சேர்ந்து சிரிக்கும் தந்தை

பெய்ரூட்

சிரியாவின் டெர்ரா நகரின் தெற்குப் பகுதியில், 2011-ம் ஆண்டில் அதிபர்அல் ஆசாத்துக்கு எதிராக சிறிய அளவிலான போராட்டம் நடந்தது. இதனைஒடுக்க நினைத்த அரசு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்ததால், உள்நாட்டு போர் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உள்நாட்டு போரில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தலையிட்டன. அதிபரின் ஆதரவுமற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகளால் போர் தீவிரமடைந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளின் போர்க் களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுபாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா தெரிவிக்கின்றது.

எப்போது வீட்டின் மீது குண்டு விழும். யார் யார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். இன்று இரவு வரை உயிருடன் இருப்போமா. நாளை அமைதியாக விடியுமா என்று எதுவுமே தெரியாமல் ஒவ்வொரு சிரியகுடிமகனும் குடிமகளும் குழந்தைகளும் அச்சத்தில் வாழ்கின்றனர். இவ்வளவு இருந்தும் தனது மகளுக்கு தைரியத்தை வரவழைக்க போராடி வருகிறார் ஒரு தந்தை.

சிரியாவில் சரகேப்பை பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா முகமது. இரண்டுமாதங்களுக்கு முன்பாக அவர் இருந்த பகுதியை துருக்கி ராணுவம் நெருங்கியதால், அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது மனைவி மற்றும் 3 வயது மகள் சல்வாவுடன் சர்மதா என்ற பகுதிக்கு புலம் பெயர்ந்தார். அங்குதனது நண்பர் வழங்கிய கைவிடப்பட்ட ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

ஒரு நாள் முகமது வசிக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அப்போது தனக்கு எதிரே உள்ள சோபாவில் நிற்கும் தனது மகளிடம், ‘‘இது விமானமா அல்லது குண்டா?” என்று கேட்கிறார். அதற்கு சல்வா, அது குண்டு என கூறிக் கொண்டே சோபாவில் துள்ளி குதித்து சிரிக்கிறாள்.

குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும் போது பயந்து ஓடாமல், துள்ளி குதிப்பது முரண்தான். ஆனால், உள்நாட்டு போரால் சிரியாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடூரங்களை நினைவுபடுத்தும் விதமாக முகமது படம்பிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக முகமது கூறியது: பிறந்த நாள் முதல் குண்டு வெடிக்கும் சத்தத்தை சல்வா கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஒரு குழந்தையாக அவளுக்கு எந்த பயமும் இல்லை.ஆனால் அவளுடைய ஒரு வயதில் இருந்து நிலைமை மாறியது. ஒரு நாள், ரமலான் விழாவின் போது, சரகேப்பில் உள்ள வீட்டுக்கு வெளியே, சிலகுழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். அதை சல்வா பார்த்துக் கொண்டுஇருக்கும் போது, அவளது அருகிலேயே ஒரு பெரிய வெடி விழுந்து வெடித்தது. அதை கேட்ட சல்வா பயத்தில் அழத் தொடங்கி விட்டாள்.

அப்போது, நான் அவளை வெளியேஅழைத்துச் சென்று, குண்டு சத்தம்கேட்ட பிறகும் குழந்தைகள் விளையாடுவதையும் சிரிப்பதையும் காட்டினேன். அப்போது அவளுக்கு நம்பிக்கை வந்ததை நான் உணர்ந்தேன். அன்று முதல் குண்டு சத்தம் கேட்கும் போது எல்லாம் எனது மகள் சிரிக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் குண்டு சத்தத்தை கேட்கும்போது, நான் சிரிக்கிறேனா என்று ​சல்வா என்னை பார்க்கிறாள். அப்போதுதான் வீடியோ எடுக்கஎண்ணினேன். யுத்தம் தனது தலைமுறை மற்றும் குழந்தைகளின் நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து விட்டது.

எனது மகள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து உயிருடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால்,நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட் டோம். தூரத்தில் விழும் குண்டுகள் அனைத்தும் சிரித்துக் கொண்டே மக்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறது. ஒருவேளை அது எனது வீட்டிலேயோ எனது குழந்தையையோ தாக்கினால் என்னால் என்ன செய்ய முடியும்.இதனால் எனது மகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நானும் சிரிக்கிறேன். குண்டுகள் எங்கள் மீது விழுந்தால், பயந்து இறப்பதை விட நாங்கள் சிரிப்பதே நல்லது.

இதைச் சொல்லி முடிக்கும்போது, வேதனைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார்.

இந்த பூமியில் அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது. அன்பு மாணவர்களே...

ஜாதி, மத, அரசியல் பேதங்கள் எல்லாம் வேண்டாம். மனிதநேயம் மட்டுமே உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உணர்ந்து செயல்படுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x