Published : 27 Feb 2020 09:28 AM
Last Updated : 27 Feb 2020 09:28 AM

புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி அசத்திய இந்திய மாணவர்கள்: இன்றைய மாணவர்களைக் கண்டு பிரமிக்கிறேன் - மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்ய நாதெள்ளா பெருமிதம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் உச்சி மாநாட்டை டெல்லியில் உள்ள இந்தியாஹாபிடெட் மையத்தில் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் நேற்று நடத்தியது. இந்த மாநாட்டில் கூடியிருந்த மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்ய நாதெள்ளா சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அனந்த்மகேஷ்வரிக்கும் சத்ய நாதெல்லாவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது பேசிய சத்ய நாதெள்ளா கூறியவை:

கற்றலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையிலான தொடர்பை நாம் புதிய கோணத்தில் அணுக வேண்டிஇருக்கிறது. அதை மிகச் சிறப்பாகஇன்றைய இளைஞர்கள் செய்கிறார்கள். இளம் கண்டுபிடிப்பாளர்கள் சிந்திக்கும் விதத்தை கண்டு நான் வியக்கிறேன். மாணவர்களை சந்தித்துஉரையாடும்போதெல்லாம் அவர்களுடைய கருத்துகளின் தரத்தைக் கண்டு பிரமிக்கிறேன். அவர்களுடைய இலக்கின் எல்லை விரிந்துகொண்டே செல்வதை கண்டு பூரிக்கிறேன். அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வமும் ஆழமான கரிசனமும் செயலாகமாறுவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையான உருமாற்றம் தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. சமூகங்களும் பொருளாதாரமும் இப்படியான வழிமுறைகளால்தான் முன்னோக்கி நகரும்.

இவ்வாறு சத்ய நாதெள்ளா பேசினார்.

இதை அடுத்து, இளம் கண்டுபிடிப்பாளர்கள் உச்சி மாநாட்டில் இந்திய மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அப்போது, தொழில்நுட்பத்தின் மூலம்உலகத்துடன் தொடர்பு கொண்டு சர்வதேச அளவிலான சமூக, சூழலியல்மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு தாங்கள் எவ்வாறு தீர்வு கண்டோம் என்பது குறித்து மூன்று இளம் கண்டுபிடிப்பாளர்கள் பேசினார்கள்.

இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் பரவலாகக் கவனத்தை ஈர்த்த சில கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருவோரின் உறுப்புகள் எந்தநோயாளிக்கு பொருத்தமாக இருக்கும்என்பதை உடனுக்குடன் இணைய வழியில் கண்டறிந்து சொல்லும் ‘ஆர்கன்செக்யூர்’ (OrganSecure) என்ற செயலியை பிரதிக் மொகபத்ரா என்ற இளைஞர் கண்டுபிடித்து இருக்கிறார். செயற்கை நுண்ணறிவில் செயல்படும் செயலி இது. இந்த கண்டுபிடிப்பு, ’2019 மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு நல்ல கருத்து சவால்’ போட்டியில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

இதனை வடிவமைத்த பிரதிக் மொகபத்ரா கணினி நிரல் எழுதுவதில் பேரார்வம் கொண்டவர். 14 வயதில் இருந்து செயலிகளை வடிவமைத்து வருகிறார். அதிலும் அன்றாடம் உதவக் கூடிய தொழில்நுட்பங்களை வடிவமைப்பதே இவருடைய முதன்மையாக குறிக்கோளாகும். அவர் தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து பேசுகையில், “உடல் உறுப்பு தானம் குறித்து இணைய தொடர் ஒன்றை அண்மையில் பார்க்கநேர்ந்தது. அதனை பார்த்தபோது எதிர்பாராமல் உடல் உறுப்பு செயலிழந்து மாற்று உறுப்புக்காக அல்லாடும் பாதிக்கப்பட்டவரின் உற்றாரும் உறவினரும் எவ்வளவு வலிகளையும் துயரங்களையும் அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். உடல் உறுப்பு தானம் தொடர்பான நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆழமாகஆராயத் தொடங்கினேன். பெங்களூருவில் உள்ள தலைசிறந்த மருத்துவமனையின் மருத்துவர்களுடன் உரையாடி பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டேன். அதன் பிறகே இந்த செயலியை வடிவமைத்தேன்” என்றார்.

அடுத்தபடியாக, பரிதாபாதில் உள்ளமானவ் ரச்னா ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் முக கவசம் மற்றும் சுவாச கோளாறு உள்ளவர்கள் எளிதில் சுவாசிக்க உதவும் நெபுலைசரை (Nebulizer) கைக்கு அடக்கமான வகையில் வடிவமைத்துள்ளனர்.

அடுத்ததாக, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சாட் பால் மிட்டல் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவரும் மாணவி நம்யா ஜோஷி (13) ஆசிரியர்களுக்கே ஆசானாக உருவெடுத்திருக்கிறார். தொழில்நுட்பத்தின் வழியாகக் கல்வியை கொண்டாட்டமாக்கும் நோக்கம் இவருடையது.

கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்ட சாகச கணினி விளையாட்டான ‘Minecraft’-ஐ அடிப்படையாக வைத்து இவர் பள்ளி பாடங்களை எளிமைப்படுத்தி இருக்கிறார். படிப்பில் விருப்பம் இல்லாத மாணவர்களையும் பாடத்துக்குள் ஈர்த்துவிடும் விளையாட்டு வழி கற்றல் முறை இது. இந்திய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ‘Minecraft’ பயன்படுத்தக் கற்பிப்பது மட்டுமல்லாமல் வியட்நாம், ஹங்கேரி, பின்லாந்து உள்ளிட்ட பலநாடுகளுக்கு ஸ்கைப் வழியில் கற்பித்துவருகிறார். இவருக்கு யுனெஸ்கோ கிளப்ஸ் 2018-19 ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x