Published : 26 Feb 2020 09:50 AM
Last Updated : 26 Feb 2020 09:50 AM

மாணவா்களின் இலக்கிய ஆா்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மன்றங்கள்: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு

மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தைஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மன்றங்கள் அமைக்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி சென்னை, தரமணியில் உள்ளஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 72வது 72 அரிய நூல்கள் மற்றும்138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீட்டு விழாவும், தமிழக அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 15 படைப்பாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார்..

இதில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறைஅமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான கே. பாண்டியராஜன் நூல்களை வெளியிட்டார். மேலும், திருக்குறள் ஓவியக் காட்சிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 15 படைப்பாளர்களுக்கு தலா ரூபாய் 40 ஆயிரத்துக்கான காசோலையும், பாராட்டுப் பட்டயத்தையும் அமைச்சர் வழங்கினார். விழாவில் பேசும்போது அவர் கூறியதாவது:

தமிழகத்திலேயே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மட்டுமே ஆண்டுதோறும் அதிகளவிலான நூல்கள் வெளியிடப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள 210 நூல்களிலும் இலக்கியம், வரலாறு குறித்த அரிய தகவல்கள் உள்ளன. இவை பொதுமக்களும், மாணவர்களும் படித்தறியும் வகையில் ஒவ்வொரு நூல்களிலும் உள்ள கருப்பொருளை எடுத்து சிறு தொகுப்பாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலக்கிய பயிற்சி பட்டறை

தமிழ் வளர்ச்சித் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல், அருங்காட்சியகங்கள் துறை ஆகிய 4 துறைகளும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட துறைகள். தமிழை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில் இந்த 4 துறைகளிலும் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக இளந்தமிழா் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1,700மாணவா்களுக்கு பேச்சு, எழுத்து தொடா்பான படைப்பாற்றல் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்கள்தற்போது மொழிபெயா்ப்பு, ஊடகப்பணி, நிகழ்ச்சி தொகுப்பாளா் எனபல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனா்.இந்தப் பயிற்சி பட்டறை வகுப்பு இந்தஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தப்படும். மேலும், மாணவா்களின் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தமிழக அரசின் சாா்பில் தமிழ் மன்றங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முன்னாள் செயலாளர் கரு.நாகராசன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன எம்.ஜி.ஆர் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டு ஆய்விருக்கை ஆய்வு உதவியாளர் இ. விஜய் வரவேற்றார். நிறைவாக, நூலகர் பி. கவிதா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x