Published : 25 Feb 2020 05:04 PM
Last Updated : 25 Feb 2020 05:04 PM

அரசுப் பள்ளியை நோக்கி மெலானியா ட்ரம்ப்பை ஈர்த்த மகிழ்ச்சிகரமான பாடத் திட்டம் என்பது என்ன?

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா இருவரும் இந்தியா வந்துள்ளனர்.

மெலானியா இன்று (பிப்.25) தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா சர்வோதயா அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்றார். அங்குள்ள பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து மெலானியாவை வரவேற்றனர். தாங்கள் வரைந்த ஓவியங்களைப் பரிசாக வழங்கினர்.

மாணவர்களுடன் உரையாடிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெலானியா, ''இந்தியாவுக்கு என்னுடைய முதல் பயணம் இதுதான். இங்குள்ள மக்கள் அன்புடன் என்னை வரவேற்றனர். இயற்கையுடன் இணைந்து மனதை நெறிப்படுத்தும் மாணவர்கள் எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கின்றனர். கல்வியாளர்கள் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, ஆரோக்கியமான, நேர்மறையான முன்னுதாரணம், மகிழ்ச்சிகரமான பாடத்திட்டம் மூலம் நிறுவப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

அமெரிக்க முதல் குடிமகள் மெலானியா ட்ரம்ப்பை ஈர்த்த அரசுப் பள்ளிகளின் மகிழ்ச்சிகரமான பாடத் திட்டம் என்ன சொல்ல வருகிறது?

இந்தியப் பள்ளிக் கல்வித்துறை போட்டிகளால் சூழ்ந்த நிலையில், தேர்வுகளையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. இதை மாற்றி, கல்வியையும் கற்றலையும் உணர்வுபூர்வமாக நிகழ்த்த வேண்டிய தேவை இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி கருதியது. அதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சிகரமான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளின் அறிவாற்றல், மொழி, கல்வியறிவு, எண் மற்றும் கலைகள் ஆகியவற்றைப் பள்ளிகளில் வளர்த்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதன் வழியாக மன வளர்ச்சியை ஏற்படுத்தி, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2018-ம் ஆண்டு இத்திட்டம் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா தலைமையில் தலாய் லாமாவால் தொடங்கப்பட்டது.

தற்போது அனைத்து டெல்லி அரசுப் பள்ளிகளிலும் மழலையர் பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை மகிழ்ச்சிகரமான பாடத்திட்டம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகள் தினந்தோறும் 45 நிமிடங்கள் என வாரத்துக்கு 6 நாட்கள் எடுக்கப்படுகின்றன. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் வகுப்புகள் இங்குண்டு.

மகிழ்ச்சிகரமான பாடத் திட்டத்தின் குறிக்கோள்
* மாணவர்களிடத்தில் சுய விழிப்புணர்வு மற்றும் நெறிகளை வளர்ப்பது
* விமர்சனச் சிந்தனை மற்றும் விசாரணைத் திறன்களைக் கற்பிப்பது
* சிறப்பான பேச்சுத் திறன்களை வளர்த்தெடுப்பது
* கோபம், பதற்றம், சகிப்பின்மையைக் குறைப்பது

இதில் தியானம், தெரு நாடகங்கள், அடிப்படை ஒழுக்கம், கோபத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த பாடத்திட்டத்தின்படி மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்தோ, எழுத்துத் தேர்வுகள் குறித்தோ கவலை கொள்ளவேண்டியதில்லை. குழந்தைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்வதே இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.

1000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதைக் கற்பித்து வருகின்றனர். மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தால் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதை அறிந்த மெலானியா ட்ரம்ப், இந்தியா வரும்போது நேரடியாக வந்து இந்தப் பாடத் திட்டம் குறித்து அறிந்துகொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x