Published : 25 Feb 2020 10:37 AM
Last Updated : 25 Feb 2020 10:37 AM

திசைகாட்டி இளையோர் - 17: குழந்தைகளின் உரிமை நாயகன்

இரா.முரளி

குஜராத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவன் ஓம்பிரகாஷ் குர்ஜர். அவன் அப்பா, தான் வாங்கியக் கடனை கட்ட முடியாததால், கடன் கொடுத்த முதலாளி கொத்தடிமைகளாக அவனையும் அவன் தந்தையையும் பிடித்துச் சென்றார்.

அப்புறம் என்ன… ஒவ்வொரு நாளும் சரியான உணவு இன்றி கடுமையான வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு. வெளியே எங்கும் போக முடியாது. அப்போது ஓம் பிரகாஷுக்கு 5 வயதுதான். ஆனால் அவனுக்கு தினமும் திட்டும், அடியும் விழுந்து கொண்டே இருக்கும். கொத்தடிமைகளை அச்சத்திலேயே வைத்திருப்பது முதலாளிகளின் யுக்தி.

விடுதலைக்குப் பின்

மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு நாள், கொத்தடிமை சிறார்களை மீட்பதற்காகவே நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் இயக்கம் எடுத்த நடவடிக்கைகளால் ஓம் பிரகாஷ் விடுவிக்கப்பட்டான்.

வெளியே வந்த ஓம்பிரகாஷ், கைலாஷ் சத்யார்த்தி நிறுவனத்தின் அரவணைப்பில் வாழத் தொடங்கினான். ஓம் பிரகாஷுக்கு கல்வி வழங்கப்பட்டது. கல்வியில் முக்கியமாக குழந்தைகளின் உரிமைகள் பற்றி போதிக்கப்பட்டது. வாழ்க்கையில் முதல் முறையாக தன்னுடைய பிறந்தநாளை தான் படிக்கும் பள்ளியில் கொண்டாடினான்.

பொதுப் பள்ளியிலே தன் கல்வியைத் தொடர்ந்தான் ஓம்பிரகாஷ். சக மாணவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள் குறித்தவிழிப்புணர்வை உண்டாக்கத் தொடங்கினான். குழந்தைகளின் பெற்றோர்களிடமும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல், படிக்க வைக்கவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தான். தொடர்ந்து சிறுவர்களுக்கான கல்வி குறித்து பிரச்சாரத்தை மேற்கொண்டான்.

அவனுடைய 12-வது வயதில் பள்ளியின்பாராளுமன்றத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான். தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன்பள்ளிகளில் அதிகமாக கல்விக் கட்டணம்வசூலிப்பதை தடை செய்யப் போராடத்தொடங்கினான். பொதுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டணம் இருக்கக்கூடாது, அனைத்து குழந்தைகளுக்கும் முறையான பள்ளிகளில் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தான். அவன்படித்தப் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தான். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றான். பள்ளியில் மாணவர்களிடம் அதிகமாக வசூலிக்கப்பட்டக் கட்டணங்கள் திருப்பித் தரப்பட்டன. சிறுவர்களை நம்பிக்கைக்குரிய செயல் வீரர்களாக உருவாக்குவதே கல்வியின் அவசியம் என்றும், குழந்தைகளின் உரிமைகள் பற்றியும் பேசத் தொடங்கினான்.

அமைதிக்கான சிறுவர் விருது

கல்வி என்பது அடிப்படை உரிமை. அதைவழங்குவது அரசின் கடமை என்று முழக்கமிட்ட ஓம்பிரகாஷ், நாட்டிலே அனைத்துக் குழந்தைகளும் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினான்.பிறப்புச் சான்றிதழ் சிறுவர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு முக்கிய ஆதாரம் என்றான்.

நெதர்லாந்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் அறக்கட்டளையின் ‘சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது’ அவனுடைய 14-வது வயதில், 'வலிமையான மாற்றங்களை கொண்டுவரும் இளைஞன்' என்று பாராட்டி 2006-ல் வழங்கியது.

இதற்கிடையே அவன் தனது கல்வியையும் கவனிக்க தவறவில்லை. குழந்தைகளுக்கான உரிமைகள், நலன்கள் மற்றும் கல்வி பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து உதவிகளைப் பெற்று, ஜெய்ப்பூரில் உள்ள பூர்ணிமா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கணினி பயன்பாட்டுக் கல்வியை தொடர்ந்தான். பின் எம்.பி.ஏ படிப்பையும் அங்கேயே தொடர்ந்தான்.

பாடசாலை தொடக்கம்

பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் மிகத் தரம் குறைவான கல்வியை பெறுவதைக் கவனித்தான். நல்ல கல்வியை அவர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற வெறி அவனை துரத்தியது.விளைவாக தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து "பாடசாலை" என்ற இலவச பயிற்சி கூடத்தை அங்கேயே தொடங்கினான். அதன் மூலம் மாலை வேளைகளில் ஏழைச் சிறுவர்களுக்கு எழுதப் படிக்க மற்றும் மென் திறன்களை வளர்த்துக்கொள்ளப் பயிற்சி அளிக்கத் தொடங்கினான். இந்த முயற்சிக்கு பல பல்கலைக்கழக நண்பர்கள் உதவி புரியத் தொடங்கினார்கள்.

இந்தப் பாடசாலையில் நாடகங்கள், கலை வடிவங்கள் மூலமும் பல்வேறு வித்தியாசமான வடிவங்கள் மூலமும் வாழ்க்கைக் கல்வி கற்பிக்கப்பட்டது. மறுபுறம் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட வேண்டும், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு நண்பர்களுடன் இணைந்து வெவ்வேறு போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் மேற்கொண்டான்.

“குழந்தைகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் இளைஞர்கள்’’ என்ற அமைப்பைஉருவாக்கினான். இதன் மூலம் நாடு முழுவதிலும் குழந்தைகள் உரிமைகளுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டான். உலகத் தலைவர்களிடம் குழந்தைகளையும், குழந்தைகளுக்கான உரிமைகளையும் பாதுகாப்பது குறித்து இவன் உருவாக்கிய அமைப்பு பேசத் தொடங்கியது. 2016 டிசம்பரில் நோபல் பரிசு பெற்றவர்கள், குழந்தை உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், உலகின் பல பகுதிகளிலிருக்கும் இளைஞர்கள் பலரும் இவன் நடத்திய சர்வதேச மாநாட்டிற்கு வந்தார்கள். இந்த மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்தது.

உலகின் பல அமைப்புகள் பேச்சாளராக வரச்சொல்லி ஓம் பிரகாஷூக்கு அழைப்பு விடுத்தன.

தற்போது “பாலமித்ரா கிராமங்கள்’’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு எல்லா நன்மைகளையும் பயக்கும் குணாம்சங்கள் கொண்டகிராமங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறான். நம் நாட்டு குழந்தைகளுக்குத் தேவை அவர்கள் மீதான உண்மையான அக்கறையும் நல்ல கல்வியும்தான் என்று கூறும் ஒரு காலத்தில் கொத்தடிமையாக சிக்கித்தவித்த ஓம் பிரகாஷ், எதிர்கால இந்தியாவிற்கான நல்ல இளைஞர்களை உருவாக்கும் பணியில் தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x