Published : 25 Feb 2020 10:06 AM
Last Updated : 25 Feb 2020 10:06 AM

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு: சேலம் மாவட்டத்தில் 75,631 மாணவர்கள் எழுதுகிறார்கள் - 10-ம் வகுப்பு தேர்வில் 45,063 பேர் பங்கேற்பு

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1,பிளஸ் 2 பொதுத் தேர்வை 75,631 மாணவர்களும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 45,063 மாணவர்களும் எழுத உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது: பள்ளிக் கல்வித்துறை சார்பில், நடப்புக் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.சேலம் மாவட்டத்தில் 130 தேர்வுமையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை 17,048 மாணவர்களும், 20,339 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 37,387 பேர் தேர்வெழுத உள்ளனர்.

பிளஸ் 1 தேர்வை 17,683 மாணவர்களும், 20,561 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 38,244 பேர் தேர்வெழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 99 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 தேர்வில் 116 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தேர்வெழுத உள்ளனர். அவர்களுக்கு அரசு விதிகளின்படி தேர்வெழுத சலுகைகள் வழங்கப்படும்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல்13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கென சேலம் மாவட்டத்தில்164 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை 45,063 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில்,266 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கும் அரசு விதிகளின்படி தேர்வெழுத சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வுகள் செம்மையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கு, அனைத்துத் துறைத் தலைவர்களுடன் தேர்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் கணேஷ் மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் சண்முகநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம்

பொதுத்தேர்வுகள் குறித்து நாமக்கல்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 85 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இதில்,20 ஆயிரத்து 208 மணவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள் மாவட்டத்தில் உள்ள 10 வினாத்தாள் கட்டு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிசிடிவி கேமரா மூலமும்கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு 85 மையங்களில் நடைபெறும்.20 ஆயிரத்து 674 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 90 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 21 ஆயிரத்து 305 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x