Published : 25 Feb 2020 09:59 AM
Last Updated : 25 Feb 2020 09:59 AM

விடைத்தாள் பக்கங்களில் ரசித்து எழுத வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு அறிவுரை

திருச்சி

விடைத்தாள் பக்கங்களில் கவனத்துடன் ரசித்து எழுத வேண்டும் என்று பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.

திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 'கனவு மெய்ப்பட' இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சியும் பிளஸ் 2மாணவர்கள் விடைபெறும் நாள் நிகழ்ச்சியும் பள்ளியில் நடைபெற்றன. இந்த விழாவில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் டைரக்டர்ஜெனரலுமான ஐஏஎஸ் அதிகாரிவெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

கல்வி என்பது வாழ்க்கை முழுவதுக்குமானது. நாம் கற்ற கல்வி, வாழும் வாழ்க்கையில் உணர்ந்து செயல்படுவதற்கானது. கருணையும் அன்பும் உழைப்பும் ஈகையும் தான் நம்மை வழி நடத்தும். எல்லோரையும் மதியுங்கள். அன்பு செலுத்துங்கள். இந்த மானிட வாழ்க்கையே அன்பிற்கானது. எதிர்காலத்தில் மிகப் பெரியஉயர்ந்த அதிகாரிகளாக நீங்கள் மாறினாலும், எளிய பணியாளர்களை, தொழிலாளர்களை, மனிதர்களை மதித்து வாழும் வாழ்வே உன்னதமானது. வாழ்வை புரிந்து கொள்வது என்பது எல்லோரிடமும் பழகுவதிலும், அன்பு செலுத்துவதிலும் தான் இருக்கிறது.

நன்றாக படித்து, மகிழ்ந்து படித்து, ரசித்து படித்து அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பதற்றமில்லாமல் தேர்வை எதிர் கொள்ளுங்கள். எளிய வினா தானே என்றுஅலட்சியமாக இல்லாமல் எல்லாவற்றையும் படியுங்கள். மாணவர்களின் கவனம் முழுவதும் விடைத்தாளின் பக்கங்களில் ரசித்து எழுதுவதில் இருக்க வேண்டும். ஆசிரியர்களை மதியுங்கள். பெற்றோர்களை மதியுங்கள். வாழ்க்கை கடினமானது அல்ல, எளிமையானது. நம்பிக்கையுடன், தூய்மையாக வாழ்ந்தால், தவறு செய்யாமல் வாழ்ந்தால் வாழ்க்கை அழகானது.

இவ்வாறு இறையன்பு கூறினார்.

முன்னதாக தங்களுக்கு பணி செய்தஓட்டுநர்கள், சமையல் கலைஞர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு பிளஸ் 2 மாணவர்கள் பரிசளித்து வாழ்த்து பெற்றனர். விழாவில்,பள்ளியின் தலைவர் ராமசாமி, செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செல்வராஜன், துணைத் தலைவர் குமரவேல், இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, முதல்வர் துளசிதாசன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x