Published : 24 Feb 2020 10:56 AM
Last Updated : 24 Feb 2020 10:56 AM

இரண்டு கண்களிலும் உள்ள கோளாறுகளை சாதகமாக்கி கோட்டு சித்திரத்தில் மூழ்கி சாதனை படைத்த ஓவியர்

ம.சுசித்ரா

தமிழ்நாட்டின் பெருமைக்கு உரியவர்களில் ஒருவர் ஓவியக் கலைஞர் மனோகர் தேவதாஸ். இவர் கோட்டுச்சித்திர ஓவியர், எழுத்தாளர், விஞ்ஞானி என பன்முகம் கொண்டஆளுமை. இவரது படைப்புகளைவிட,அதை மேற்கொண்டவிதம் தான் அபூர்வமானது.

தனது இரண்டு கண்ணிலும் உள்ள பார்வை குறைபாடுகளை மனதில் கொள்ளாமல் தனக்கு இருக்கும் திறனை கொண்டு சாதனைகளை நிகழ்த்தியவர். இவருக்கு மத்திய அரசு 2020-ம் ஆண்டு பத்ம விருது கவுரவித்தது. இவருடன் ஒரு நேர்காணல்...

# ஓவியம் என்பது ஒரு அபூர்வமான கலை, அதிலும் கோட்டுச் சித்திரம் மிகநுணுக்கமாகத் தீட்டப்படும் ஒரு கலை வடிவம், இதற்குள் எப்படி வந்தீர்கள்?

நான் சிறு வயதாக இருக்கும் போதேஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன். எனக்கு இரண்டரை வயது இருக்கும்போது மெட்ராஸ் விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒட்டகச்சிவிங்கியை வரைந்தேன். அதுபற்றி எனக்கு சரியாக நினைவில் இல்லை. மதுரையில் என் வீட்டின் முன்பு இருந்த ஈச்ச மரத்தை வரைந்தது நினைவில் உள்ளது. மதுரை என்பது ஓவியம் வரைவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஊர்.இதனால் நான் செல்லும் இடமெல்லாம்‘பவுன்டைன் பேனா’ வைத்து பல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தேன்.

அதன்பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வேளையில், செங்கற்களால் கட்டப்பட்டஒரு அழகிய கட்டிடத்தை வரைய நினைத்தேன். அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. பின் அதை வரைந்ததும் அனைவரும் பாராட்டினர். பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நல்லா வரைஞ்சுருக்கியேனு சொல்லி அதை பிரசுரம் செய்தார். இந்த கலையை நானாகவே கற்றுக் கொண்டேன். வேறு பயிற்சி பெறவில்லை.

ஓவியம், தூரிகையில் வரைவது என்பது வழக்கமான ஓவியம். இதில் கோட்டுச் சித்திரம் என்றால் என்ன என்பதும் அதன் தனித்துவத்தை பற்றியும் சொல்லுங்களேன்....

கோட்டுச் சித்திரம் என்பது ஒருகோடு மிகவும் கருப்பாக இருக்கும் இல்லையென்றால் வெள்ளையாக இருக்கும். இதில் வண்ணம் கிடையாது. இவை இரண்டுக்கும் இடையில் ஒரு ஓவியத்தை தீட்டுவதற்கு சற்று பிரத்யேகமான திறமை வேண்டும். இதுஒரு அருமையான சவால். அந்த சவால்தான் எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக என் பார்வை திறன் குறையும்போது வண்ணம் சரியாக தெரியாது கருப்பு வெள்ளைதான் நன்றாக தெரியும். அது வண்ணங்கள் இல்லாமல் மெலிதாக கோட்டுச் சித்திரம் வரைவதற்கு ஏற்றதாவும் பிற்காலத்தில் சாதகமாகவும் இருந்தது.

# உங்கள் குறைபாட்டையே சாதனை வடிவமாக மாற்றிக் கொண்டீர்கள். அப்படி தானே?

(சிரித்தபடியே) ஆமாம். அப்படியும் கூறலாம்!

# பொதுவாக ஒரு ஓவியனுக்கு கண் பார்வை மிகவும் முக்கியமானது. ஆனால் உங்களுக்கு ‘டனல் விஷன்’, ‘காட்ராக்ட்’ போன்றஅறியப்படாத கண் நோய் உள்ளது.எப்படி இந்த சிக்கலை எதிர் கொண்டீர்கள்?

எனக்கு 31 வயது இருக்கும்போது இரவில் பார்வை குறைவாக தெரிந்தது.நானும் அனைவருக்கும் இருப்பது போன்ற பிரச்சனைதான் என்று நினைத்தேன். ஒரு மருத்துவரும்கூட இதையே கூறினார். பிறகுதான் தெரிந்தது என்பார்வையின் நிலைக்கு பெயர், ‘ரெட்டினைடிஸ் ஸ்பிக்மன்டோசா’ என்று. இதுரெட்டினா கொஞ்சம் கொஞ்சமாக அதன் பார்வையை இழக்கும். இப்படிதான் என் 75 வயதில் வலது கண் பார்வையை இழந்தேன். அதன்பின் இதுகுணப்படுத்தவே முடியாத நோய் என்றுடாக்டர் பத்ரிநாத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது.

# ஆனால் நீங்கள் பார்வை இழந்த பிறகுதான் அதிகளவிலான பணிகள் செய்துள்ளீர்களே?

ஆமாம், இதற்கு என் மனைவி மஹிமாதான் காரணம். சரியாக எனக்கு 72வயது இருக்கும்போது கார் விபத்துஒன்றில் என் மனைவி பாதிக்கப்பட்டார்.கழுத்துக்கு கீழ் அசைவில்லாமல் இருக்கும். இதுவும் என் வலது கண் பார்வைமுற்றில் செயலிழந்த தருணமும் ஒருசேர நடந்தது. மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானோம். இதற்கிடையில் மற்றோரு கண்ணிலும் பார்வை இழப்பதற்குள் அதிகமாக வரைந்துவிட வேண்டும் என்ற எண்ணினேன்.

நான் படம் வரையும்போது என் மனைவி என் அருகில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அப்போது 1976-ல் அதிகமாக ஓவியம்வரையத் தொடங்கினேன். தொடர்ச்சியாக வரைந்தேன். 1979-ல் நான்800-க்கும் அதிமான ஓவியங்களைவரைந்திருந்ததை கண்டறிந்தேன்.அதில் வரைந்த அனைத்து ஓவியங்களின் தரமும் உயர்வாகவே இருந்தன.

# நீங்கள் ஓவியம் மட்டுமல்லாமல்ஐந்து நூல்களும் எழுதியுள்ளீர்கள். அதில் ஒன்று தமிழிலும்வந்துள்ளது. அந்த நூல்கள் உருவானது பற்றி கூறுங்கள்?

அது ஒரு கண்ணில் மட்டுமே வரைந்து கொண்டிருந்தபோது சரியாக 1979-ல் ‘காட்ராக்ட்’ உருவாகத் தொடங்கியது. ஒரு கண்ணில் ரெட்டினைடிஸ் ஸ்பிக்மன்டோசா, மற்றொரு கண்ணில் காட்ராக்ட். இப்படிதான் பார்க்க முடியாமல் போனது. அப்போதுதான் புத்தகம் எழுதலாம் என்று தோன்றியது.

அது என் பால்ய வயதில் நடந்தவற்றை ஒரு சுயசரிதம் போல எழுதினேன். நான் சொல்ல சொல்ல என் உதவியாளர் எழுதுவார். அதை என் மனைவி மஹிமா பிழைத் திருத்தம் செய்து கொடுப்பார். மேலும் அந்த புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் அனைத்தும் நான் வரைந்ததுதான். அது எழுதும்போது அத்தனைஅலாதியாக இருந்தது.

இவ்வாறு மனோகர் தேவதாஸ் சிரித்தபடியே கூறினார். அவருடைய கலைப்பணி அதே ஆர்வத்துடன் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x