Published : 24 Feb 2020 10:23 AM
Last Updated : 24 Feb 2020 10:23 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: முதலிடம் பிடித்த இந்தியா

பி.எம்.சுதிர்

2007-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில்இந்திய அணி பெற்ற வெற்றி, அதன் முகத்தை மிகப்பெரியஅளவில் மாற்றியமைத்தது. கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத அணி என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியாவை, அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு இந்திய அணி அவ்விடத்தைப் பிடிக்கவும் அது முக்கிய காரணமாய் அமைந்தது.

அணியில் மிகப்பெரிய மாற்றமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த கேப்டனாக மகேந்திர சிங் தோனி உருவெடுத்தார். அவரைச் சுற்றி இளம் நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு அணி கட்டமைக்கப்பட்டது. சச்சின், திராவிட், கங்குலி, லக்‌ஷ்மண் என்று அணியில் இருந்த மூத்தவர்களில், சச்சினைத் தவிர மற்றவர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமாக ஓரங்கட்டப்பட்டார்கள். அவர்களுக்கு பதிலாக சேவக், காம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என்று புதியவர்கள் அந்த இடத்தைப் பிடித்தனர். சில நாட்களிலேயே விராட் கோலியும் அந்த வரிசையில் வந்து சேர அணி இன்னும் வலிமையானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்கும் பதற்றப்படாத, ‘கேப்டன் கூல்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட கேப்டன் மகேந்திர சிங்தோனி, எந்தச் சூழலையும் லாவகமாக எதிர்கொண்டார். ஒட்டுமொத்த அணியும் ரிலாக்ஸான முறையில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட, எதிரணிகள் திணறின. இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெளுத்து வாங்கியது.

எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டது, அணிக்கு மேலும் வலுவூட்டியது. கேப்டன் தோனியின் பொறுமை, அணியின் மூத்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் அனுபவம், பயிற்சியாளர் கிர்ஸ்டனின் புதுமையான பயிற்சிகள் ஆகியவை இந்திய அணியை யாரும் நெருங்க முடியாத எக்குக் கோட்டையாக மாற்றியது. அந்த உத்வேகத்தில் 2011-ம் ஆண்டு நடந்தஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும், அதைத் தொடர்ந்து நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வாகை சூடி ஒருநாள்கிரிக்கெட் போட்டியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது இந்தியா. உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகிழ்ச்சியாக விடைபெற்றார் சச்சின் டெண்டுல்கர்.

இவ்வாறாக சி.கே.நாயுடு, லாலா அமர்நாத் போன்ற நட்சத்திரங்களால் உருவாகி, கபில்தேவ், கவாஸ்கர் போன்ற நட்சத்திரங்களால் வளர்ந்து, சச்சின், கங்குலி, தோனி ஆகியோரால் உச்சம் பெற்ற இந்திய கிரிக்கெட்டை இப்போது விராட் கோலி தலைமையிலான இளம் நட்சத்திரங்கள் ஆள்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டை அவர்கள் இன்னும் அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x