Published : 24 Feb 2020 10:14 AM
Last Updated : 24 Feb 2020 10:14 AM

ஐம்பொறி ஆட்சி கொள்15- வறுமையிலும் சம்பாதித்தவர்

முனைவர் என்.மாதவன்

பள்ளிக்கூடத்தைத் திறக்க அம்மாநிலத்தின் முதலமைச்சர் வருகிறார். வரும் வழியில் தம் நண்பரான சட்டமன்ற உறுப்பினர் ஒருவரையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். முதலமைச்சரின் வாகனம் ஒரு குடிசைப்பகுதிக்குள் செல்கிறது. அக்குடிசையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியே வருகிறார்.

சிறிது நேரம் பேசிவிட்டு, நிகழ்ச்சிக்கு உடன் வரும்படி முதலமைச்சர் அழைக்கிறார். “நீங்கள் நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். நான்
சிறிதுநேரம் கழித்து வந்து உங்களுடன் இணைந்துகொள்கிறேன்” என்கிறார் சட்டமன்ற உறுப்பினர். முதலமைச்சரும் மறுவார்த்
தைப் பேசாமல் புறப்படுகிறார். இவரும் சொன்னபடியே சிறிது நேரத்திற்கெல்லாம் நிகழ்வில் வந்து இணைந்துகொள்கிறார். நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடந்தேறுகிறது.

தாமதித்தது ஏன்?

இப்போது முதலமைச்சர், “இந்நிகழ்ச்சிக்கு நான் அழைத்தவுடன் வராமல் ஏன் காலம் தாழ்த்தி வந்தீர்கள்” என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா என்றார். அந்த சட்டமன்ற உறுப்பினரும் சிரித்துக்கொண்டே ”என்னிடம் இருப்பது ஒரு நல்ல வேட்டி சட்டைதான். அதை துவைத்துக் காயவைத்திருந்தேன். சிறிது நேரம் சென்றுதான் அதுகாய்ந்தது. அது காய்ந்ததும் எடுத்து அணிந்து
கொண்டுவந்தேன். வேறொன்றுமில்லை”. என்றாராம்.

அந்த முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர். அந்த் சட்டமன்ற உறுப்பினர் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த தோழர் ஜீவானந்தம் (1907 1963). நன்கு கவனியுங்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டில் மாற்றுத்துணி கூட இல்லாத வறுமையில் வாழ்ந்து இருக்கிறார். அவர் வறுமையில் செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்தவர்.

ஒரு முறை காமராஜர் அரசு ஒதுக்கீட்டின்படி தோழர் ஜீவானந்தத்துக்கு வீடு ஒதுக்க முன்வந்தபோது அதை மிகவும் கனிவோடு மறுத்துவிட்டார். தமிழ்நாட்டில் எண்ணற்ற ஏழைகள் வீடில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கிடைத்த பிறகு
எனக்கென்று ஒன்றை பெறுகிறேன் என்றாராம். இவர்களெல்லாம் பொதுவாழ்க்கைக்கான பாதையை செப்பனிட்டவர்கள்.

யாருடைய பணம்?

ஒரு முறை பொதுவுடைமைக் கட்சியின்மாநாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாநாடு முடிந்த மறுநாள் பந்தல்காரர், ஒலிபெருக்கி ஏற்பாட்டாளர் என அனைவருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை தோழர் ஜீவானந்தம் கொடுக்கிறார். காலை நேரம் பொழுது சிறிது கூடுதலாக செலவாகிவிடுகிறது. சட்டென்று தோழர் ஜீவா மயக்கமடைகிறார். உடனிருந்தோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மருத்துவர் பரிசோதிக்கையில் தாம் காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை என்ற உண்மையைப் பகிர்கிறார். உடன்வந்தோர் என்ன தோழர் இப்படியா செய்வது காலையில் நாலு இட்லி புட்டுபோட்டுக்க வேண்டியதுதானே என்று கடிந்துகொள்கின்றனர்.

செய்திருக்கலாம்தான். ஆனால் அதற்கு என்னிடம் காசில்லையே என்றாராம். உடனிருந்தோர் ஆச்சரியப்பட்டு நின்றனராம். ஒருவர் கேட்டாராம். ”என்ன தோழர் நீங்கள்தானே எல்லோருக்கும் பணம் செட்டில் செய்தீர்கள். இன்னும்கூட உங்கள் கைப்பையில் காசிருக்கிறதே கவனிக்கவில்லையா?” மெதுவாக தோழர் ஜீவா சொன்னாராம். ”பணம் இருக்கிறதுதான். ஆனால், அது என் பணமில்லையே கட்சியின் பணமாயிற்றே. நான் எப்படி அதனை எனக்காகச் செலவழித்துக் கொள்வது?” என்றாராம். சுற்றி நின்றோர் வாயடைத்து நின்றனராம்.

தோழர் ஜீவா தன் வாழ்நாள் முழுவதும் பொதுப்போக்குவரத்திலேயே பயணம் செய்திருக்கிறார். நல்ல பேச்சாளர், எழுத்தாளர், பலரையும் உற்சாகப்படுத்தி எழுதச்செய்பவர் என்ற பல நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரராக வாழ்ந்திருக்கிறார்.

பாரதியாரின் மேல் அளப்பரிய பற்றுக்கொண்டவர். பாரதியின் சிறப்பை உலகறிய செய்ய எண்ணற்ற சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறார். கம்பன் மேலும் ஈடுபாடு கொண்டு பல்வேறு இலக்கிய நயம் மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள். எப்படிப்பட்ட பொதுவாழ்க்கை அவர் வாழ்ந்து மடிந்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்திருந்தாலும் வாழ்நாள் முழுவதும் வறுமையிலேயே வாழ்ந்திருந்தாலும் எப்படிப்பட்ட செல்வந்தாராக அவர் வாழ்ந்திருக்கிறார் தெரியுமா? அதற்கு சான்று வேண்டுமென்றால் அவரது இறுதி யாத்திரையில் பங்கேற்ற இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரே சாட்சி. ஆம் எளிமையும் அடுத்தோரையும் மதித்து நேசிக்கும் பண்பும், அடுத்தோரின் வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் அவர் செலுத்திய அக்கறைதானே அவரை இப்படிப்பட்ட செல்வந்தராக்கியது. இப்போது சொல்லுங்கள் காந்தியின் பின்வரும் கூற்றுக்கு சரியான உதாரணம் ஜீவா அவர்கள்தானேபொதுவாழ்க்கைக்காக தனது காசை செலவு செய்வோர் பொதுவாழ்வில் இருந்து தனக்குக் காசை சேர்ப்போர் இருவராலும் சமூகத்திற்குப் பயனில்லை - காந்தியடிகள்.

(தொடரும்)

கட்டுரையாளர்:

பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x