Published : 24 Feb 2020 09:31 AM
Last Updated : 24 Feb 2020 09:31 AM

கேரள அதிநவீன தொழில்நுட்ப ஆய்வகங்களில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க புதுதிட்டம்: அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கை கடந்த 50 ஆண்டு காலமாக அமலில் உள்ளது. எனினும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்த மாணவர்கள், உயர்கல்வியை ஆங்கில வழியில் படிக்கும்போதும், வேலை வாய்ப்புகளுக்கான நேர்முகத் தேர்வின் போதும் கஷ்டப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

தாய்மொழி மொழி கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதற்கு இணையாக ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்த ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆங்கில மொழியில் சரளமாக உரையாடும் வகையில் பேச்சாற்றல் பெறுவதற்கு முறையாக பயிற்சி அளித்து அந்நிலையை அடைய தொடர் முயற்சியை ஊக்கப்படுத்தும்போது மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க முடியும்.

ஒன்று முதல் 5-ம் வகுப்புக்கு 2-ம் பருவத்துக்கு ஒரு கையேடும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சேர்த்து வகுப்பு வாரியாக 4 கையேடுகளும் தயாரிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு வாரத்துக்கு 45 நிமிடத்துக்கும் ஒரு பாடவேளையில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஒரு படி மேலாக சென்ற ஆந்திர பிரதேச அரசு, மாநிலத்தில் தெலுங்கு வழியில் இருந்து அனைத்துஅரசு பள்ளிகளையும் கடும் எதிர்ப்புக்கு இடையில் முற்றிலுமாக ஆங்கில வழிக்கு மாற்றிவிட்டது.

இந்நிலையில், கேரளாவில் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பம் (கைட்) புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

உயர்தரமிக்க ஆய்வக வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனைமேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் ‘மகிழுங்கள், மேம்படுத்துங்கள் வளப்படுத்துங்கள் - இ-3’ (Enjoy, Enhance and Enrich) என்ற திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கைட்டின் தலைமைநிர்வாக அதிகாரி கே.அன்வர் சதாத் கூறியதாவது:

தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திக் கொள்ள ஒரு சுவாரசியமான சூழ்நிலையில் ஆங்கில கற்றலை மேம்படுத்தவும், வளப்படுத்தவும் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, சமக்ரா இ -நூலகம், இ -மொழி ஆய்வகம், இ-ஒளிபரப்பு ஆகிய மூன்று வழிமுறைகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன.

கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கபள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளிக்கப்படும். இந்த திட்டமானதுபுதிய கல்வியாண்டில் செயல்படுத்தப்படும். சமக்ரா இ-நூலகம் என்பதுசர்வதேச தரமிக்க டிஜிட்டல் புத்தகங்களின் டிஜிட்டல் களஞ்சியமாகும். இது மாணவர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களில் கிடைக்கும்.

2-வது வழிமுறை இ-மொழி ஆய்வகம். இது மொழி ஆய்வக மென்பொருளைக் கொண்டுள்ளது. இது மாணவர்களுடன் கலந்துரையாடுவது போன்று கேட்பது, பேசுவது, வாசிப்பது, எழுதுவது, உச்சரிப்பு, இலக்கணம், சொல்லகராதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும். மூன்றாவதாக ஆடியோ வீடியோ வசதிகளை கொண்ட மல்டி மீடியா நிரல்களை உள்ளடக்கிய இ-ஒளிபரப்பு ஆகும். இவ்வாறு கே.அன்வர் சதாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x