Published : 24 Feb 2020 08:49 AM
Last Updated : 24 Feb 2020 08:49 AM

`இந்து தமிழ்' நாளிதழ், `சங்கர் ஐஏஎஸ்' அகாடமி இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற தெளிவான இலக்கு தேவை: சென்னை அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ.சகாயம் அறிவுரை

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ‘ஆளப் பிறந்தோம்’ நிகழ்ச்சியில் சென்னை அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ.சகாயம் பேசினார். அருகில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.தீனதயாளன், தியாகராசர் பொறியியல் கல்லூரியின் அசோஷியேட் டீன் வேல் கென்னடி, ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் முதன்மைப் பயிற்றுநர் எஸ்.சந்துரு.

மதுரை

திறமை, ஆற்றல், தெளிவான இலக்கு, திட்டமிடுதல் ஆகியவை இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும் என சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் சிவில் சர்வீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை மதுரை திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடத்தின.

இந்நிகழ்ச்சியில் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் ஐஏஎஸ் பேசியதாவது:

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. வழிகாட்டுதலுக்கு வழியில்லாத சூழலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதைப்போல் ஐஏஎஸ் தேர்வில் நான் வெற்றிபெற எனது தன்னம்பிக்கைதான் காரணம். யுபிஎஸ்சி தேர்வுகள் நேர்மையாக நடைபெற்று வருகின்றன. திறன், ஆற்றல், தெளிவான இலக்கு, திட்டமிடல் இருந்தால் நிச்சயம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற முடியும். கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதல் இடத்தில் வெற்றி பெற்றவர் கட்டாரியா. இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர். 2-வது, 3-வது இடங்களில் வெற்றி பெற்றவர்கள் முறையே ஜெயின், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் யுபி எஸ்சி தேர்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு இதுவே சாட்சி. உழைக்கும் திறன் இருந்தால் போதும்.

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி யாக இருந்தால் உலகமே உங் களைக் கொண்டாடும். நாடு மிகச் சிறந்த முன்னேற்றம், வளர்ச்சி பெற தங்களிடம் இருந்து மாற்றம் உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.தீனத யாளன், தியாகராசர் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.ராஜ்குமார், அசோஷியேட் டீன் வேல் கென்னடி ஆகியோர் பேசினர். ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வருக்கும் அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத் திட்டக் கையேடு இலவசமாக வழங்கப் பட்டது. பங்கேற்ற அனைவருக் கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் ஆங்கிலம்- தமிழ் அகராதி வழங்கப்பட்டது. மார்ச் 8-ல் கோவையில் அடுத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ்: ஒரு சந்திப்பு, ஒரு கூட்டம், ஒரு பேச்சு... எது ஒன்றும் நம் வாழ்க்கையை மாற்றிவிடலாம். தேவையெல்லாம் நாம் யார், எதற்காகப் பிறந்திருக்கிறோம், இச்சமூகத்துக்கு நாம் என்ன செய்துவிட்டு செல்லப்போகிறோம் என்பதை உணரும் மகத்தான நேரம்தான். கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கே சென்றார் ஒரு பெண். கூலி உயர்வு கேட்டு போராடினார்கள் என்ற காரணத்துக்காக 44 பேர் எரித்தழிக்கப்பட்ட நிலவுடைமை சாதியக் கொடுமையை நேரில் பார்த்தவர் இடிந்துபோனார்.

இத்தகு சமூகக் கொடுமைக்கு எதிராக நான் என்ன பங்களிக்கப் போகிறேன் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டார். விளைவாக அந்தக் கேள்விக்குத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உருவாக்கிய ‘உழவனின் நிலவுரிமை இயக்கம்’ கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை நிலவுடைமையாளர்களாக ஆக்கி இருக்கிறது. ஒரு மகத்தான சமூக மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது என்றால், அதற்கு அர்ப்பணிப்புமிக்க உழைப்பின் பின்னுள்ள ஒரு கேள்விதான் காரணம். இச்சமூகக் கொடுமைக்கு எதிராக நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே அது. எந்தக் கணத்தில் அந்தக் கேள்வியை நீங்கள் உணருகிறீர்களோ அந்தக் கணம் உங்களை மாற்றிவிடும்.

காந்திய சமூகச் செயற்பாட்டாளர் பத்மபூஷன் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்: இந்த நிகழ்ச்சிக்கு வருவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. தற்போது சமுதாயத்தின் நிலைமையைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கண்கள் கலங்குகின்றன. மாணவ, மாணவர்களைப் பார்க்கும்போது, உற்சாகமாக இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகள் யாராவது என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்றால் முடிந்தளவு சமுதாயச் சீர்கேடுகளை நீக்கிடலாம் என நினைக்கிறேன்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் முதன்மைப் பயிற்றுநர் எஸ். சந்துரு: 2013-14-ம் ஆண்டில் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,400 ஆக இருந்தது. தற்போது காலியிடங்கள் 800 முதல் 900 ஆக உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆண்டுதோறும் 4.50 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இவர்களில் ஒரு லட்சம் பேர் தான் முதல்நிலைத் தேர்வு எழுதுகின்றனர். ஆயிரம் காலியிடம் இருந்தால் முதல் 180 இடங்களில் வருவோருக்கு ஐஏஎஸ் பணியும், அடுத்து 25 முதல் 50 பேருக்கு ஐஎப்எஸ் பணியும், அடுத்து 150 பேருக்கு ஐபிஎஸ் பணியும் ஒதுக்கப்படும். விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும்போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகள் உற்சாகம்

பி.கீர்த்தி, மதுரை: யாதவர் பெண்கள் கல்லூரியில் பி.காம் படிக்கிறேன். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என் ஆசை. இதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுகோலாக அமைந்தது. தேர்வு குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

பி.ராகவி, எல்லீஸ் நகர்: மதுரைக் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் பயில்கிறேன். போட்டித் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதைப் பேச்சாளர்கள் மிகவும் தெளிவாக விளக்கினர். இந்த வழிகாட்டி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

எம்.ராம்குமார், திருப்பரங்குன்றம்: மன்னர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் பயில்கிறேன். பலத்த எதிர்பார்ப்புகளுடன் வந்தேன். பேசியவர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இருந்தது. முயன்று படித்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என் பதைத் தெரிந்துகொண்டேன்.

எம். ஹேமாவதி, பொன்மேனி: டோக் பெருமாட்டிக் கல்லூரியில் படிக்கிறேன். சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே என் ஆசை. இதற்கான முயற்சியில் ஈடுபடு கிறேன். உ.சகாயத்தின் உரை ஊக்கமளித்தது. ஏராளமான நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x