Published : 24 Feb 2020 12:33 PM
Last Updated : 24 Feb 2020 12:33 PM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க உத்தரவு

சென்னை

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான இன்று (பிப்.24) அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து வகை பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி இன்று (பிப்.24) மனித சங்கிலி, பேரணி, உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கம் உட்பட நிகழ்ச்சிகளை நடத்தபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர பள்ளிகளில் மாணவ, மாணவிகள் எடுக்க வேண்டிய உறுதிமொழி விவரம்: இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம்,மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.

எனது செயல்பாடுகளால் எந்தவொரு குழந்தையையும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்துகொள்வேன். எனது கவனத்துக்குவரும் குழந்தைகளுக்கு எதிரான பாதிப்புகளை தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.

குழந்தை திருமணம் பற்றியதகவல் தெரிந்தால் அதை தடுத்துநிறுத்த எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையின்படி அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் உரிமைகள் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் உரிமைகள் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x