Published : 24 Feb 2020 07:51 AM
Last Updated : 24 Feb 2020 07:51 AM

கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்: ஐஏஎஸ் வழிகாட்டி நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல்

கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம் என ஐஏஎஸ் வழிகாட்டி நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் `இந்து தமிழ் திசை'நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஆகியவை இணைந்து ‘ஆளப்பிறந்தோம்’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை நேற்று நடத்தின. இதை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

வழிகாட்டி நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள். போட்டி நிறைந்த உலகில் நம்மை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது என்ற சவால்கள் உள்ளன. பார்வையாளரா, பங்கேற்பாளரா, வெற்றியாளரா என்றால், சிலர் பார்வையாளர், சிலர் பங்கேற்பாளர், பலர் சாதிக்கக்கூடியவர்கள். என்றாலும், இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஆளப் பிறந்தவர்கள்.

இந்த நேரத்தில் எனது சவாலை நினைத்துப் பார்க்கிறேன். தியாகராசர் கல்லூரியில் பி.காம். படித்தபோது, பெற்றோர் கனவை நிறைவேற்றும் வகையில், எனக்கு வங்கிகளின் மேலாளர் வேலைக்கு அழைப்பது போன்று நினைத்தேன். முடித்த பிறகுதான் தெரிந்தது சி.ஏ. படிப்பு முடித்து ஒரு லட்சம் பேர் வங்கி வேலைக்கு காத்திருப்பது. பிறகு எம்எஸ்டபிள்யூ படித்து, பெற்றோர் கனவை நிறைவேற்ற நினைத்தேன். அதிலும், 2 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பது தெரிந்தது. அதுவும் சரியாக இல்லை. எப்படியாவது சிறந்த வழக்கறிஞராகிவிடலாம் எனக் கருதி மதுரை சட்டக் கல்லூரியில் படித்தேன். முடித்த பிறகு பார்த்தால் வழக்கறிஞரைத் தேடிபாதிக்கப்படுவோர் (கிளையண்ட்)வரவில்லை. பாதிக்கப்படுவோரைத்தேடி வழக்கறிஞர்கள் செல்லும் போட்டி இருந்தது. அதுவும் நிறைவேறவில்லை.

இது போன்ற சூழலில் எனது லட்சியத்தை மாற்றிக் கொண்டே வந்தாலும், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தேன். முயற்சிகளை எடுத்தேன். இந்த நேரத்தில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைபட்டு, இன்றைக்கு வருவாய் உட்பட 3 துறை அமைச்சராக திறம்பட செயல்படுகிறேன். இதற்கு நான் எடுத்து முயற்சிகளே காரணம்.

என்னைப் போன்ற அமைச்சர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்திருந்தாலும், அவற்றை நிறைவேற்றுபவர்கள் ஐஏஎஸ் போன்ற உயர் அதிகாரிகள்தான். மக்களின் விருப்பத்தை தலைமைச் செயலர் போன்ற உயர் அதிகாரிகளிடமும் சொல்வோம்.

மொபைல் போனில் எத்தனையோ கண்டுபிடிப்பு மற்றும் பல்வேறு தாக்கங்கள் நம்மைத் தாக்கினாலும் நமது நிலைகளை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். போட்டி நிறைந்த இந்த உலகில் ஆயிரம் குதிரை சக்தியைவிட, நாம் வேகமாக ஓடவேண்டும். படிப்பது, கேட்பது, பங்கேற்பது எதுவாக இருந்தாலும், ஆழமாகத் தெரிந்து கொள்ளும்போது, முழுப்பயனை அடையலாம். வாசிப்பு இருந்தால் தலைமைப் பண்பு வந்து விடும். கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை இருந்தால் எதிலும் சாதிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x