Published : 21 Feb 2020 06:39 PM
Last Updated : 21 Feb 2020 06:39 PM

குழந்தைகளுடன் உரையாடுவோம்: 7 - உதய கீர்த்திகாவாக உருவாகலாமா? தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம் 

உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 21 ஆம் தேதியான இன்று இது குறித்த உரையாடலைத் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும்.

கல்வி என்றாலே ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சி என்று சுருக்கமாகக் கூறிவிடலாம் . அப்படியான ஆளுமையை வெளிக்கொண்டு வருவதுதான் பள்ளிக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. இவை செயலாக வேண்டுமானால் ஒரு குழந்தை தனது பள்ளிக் கல்வியை தாய்மொழி வழிக் கல்வியில் பெற வேண்டும்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்கையில் தமிழ் வழியில் 8 குழந்தைகளும் , ஆங்கில வழியில் 110 குழந்தைகளும் சேர்ந்திருந்தனர்.

ஆங்கில வழியில் படிக்கும் வினோதினி, பிரியதர்சினி இருவரும் கணக்குப் பாடத்தில் பாட ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க, ஆசிரியரது அறையில் சந்தித்தனர். அது பொருட்களின் சமச்சீர் ( Symmetry) குறித்த பாடப்பகுதி. ஆசிரியர் ஆங்கிலத்தில் விளக்கம் தந்து குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களுடைய குழப்பமான முகத்தைக் காண முடிந்தது. தமிழில் சொல்ல முற்படுகிறார் ஆசிரியர்.

அவர்கள், ''மிஸ், தமிழில் சொன்னாதான் எங்களுக்குப் புரியுது'' என்கின்றனர். பிறகு ஆசிரியர் தமிழில் விளக்க, குழந்தைகளின் முகத்தில் ஆயிரம் விளக்குப் பிரகாசம். அதற்குக் காரணம், தாய்மொழிதான் புரிதலுக்கு ஆதாரமான மொழி என்பதே. 110 குழந்தைகளும் தாய்மொழி வழிக் கல்வியில் கல்வி பெற்றால் அனைவருமே வைரங்களாக ஜொலிக்கும் வாய்ப்புகள் உண்டு. இதை உணர்ந்த பல நாடுகள் தங்கள் பள்ளிகளில் கட்டாயத் தாய்மொழி வழிக் கல்வியைப் பின்பற்றுகின்றனர். அங்கெல்லாம் கல்வி சிறந்து விளங்குகின்றது.

தாய்மொழிக் கல்வியால்தான் இன்று நான் என் கனவுகளை அடைய முடிந்தது என்கிறார் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்று வரும் தமிழக மாணவி உதய கீர்த்திகா. தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் தனது பள்ளிக் கல்வியைப் பயின்றவர் இவர். படிக்கும் காலத்தில் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெளி இடங்களுக்குச் சென்று பலரையும் சந்தித்து பலவிதமான அனுபவங்களையும் பெற்றது குறித்து பகிர்ந்துகொண்ட இவர், ''அதற்கெல்லாம் எனக்கு உந்துதலாக இருந்தது தாய்மொழியில் பயின்றதுதான்'' என்கிறார்.

அறிவியலில் விண்வெளி குறித்த தேடல் இவரைப் பல புத்தகங்களைத் தேடவைத்து விண்வெளி ஆய்வு குறித்த கட்டுரைகளைப் படைக்க வழிகோலியிருக்கிறது. பள்ளிக் கல்வியில் 10, 12-ம் வகுப்புகளில் உதய கீர்த்திகா விண்வெளி குறித்தான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டார். எழுதி அனுப்பிய இரண்டு கட்டுரைகளும் இரு முறைகளுமே முதலிடம் பெற்றன. அதன் அடுத்தகட்ட நகர்வாக, உக்ரைன் நாட்டில் உள்ள 'கார்க்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிட்டி' என்ற அந்நாட்டு விமானப்படைப் பல்கலைக்கழகத்தில் "ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங்" என்ற 4 ஆண்டு கால சிறப்புப் பொறியியல் கல்வி பயின்று, இறுதியாண்டுத் தேர்வில் 92.5 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் தேர்ச்சியடைந்துள்ளார்.

தற்போது விண்வெளி ஆய்வு குறித்து உயர்கல்வி பயில போலந்து நாட்டில் உள்ள "அனலாக் ஆஸ்ட்ரோனட் டிரெயினிங் சென்டர்" என்ற விண்வெளி வீரர்கள்களுக்கான பயிற்சி மையமும், அந்நாட்டு ராணுவ அகாடமியும் உதய கீர்த்திகாவுக்கு இரண்டு மாதங்கள் 10 விதமான விண்வெளி வீரர் பயிற்சியை அளித்துள்ளன. தற்போது மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள இவர், அதற்காக பைலட் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான படிப்பில் டெல்லியில் இணைந்துள்ளார். ஆங்கில வழிக் கல்வியின் மீது மக்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்தக் காலத்தில்தான் உதய கீர்த்திகா தாய்மொழியில் கல்வி பயின்று இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

இவரது கனவு மெய்ப்பட்டு தற்போது தமிழகத்தின் பெரும்பான்மையான ஊடகங்களால் பேசப்படுகிறார். இவற்றிற்கெல்லாம் காரணம், தனது தேடலுக்கான களம் தாய்மொழியில் இருந்துதான் கிடைத்தது என்கிறார்.

ஒரு குழந்தை பிறந்து பள்ளி வரும் வரை தனது வீட்டில் கேட்பது, பேசுவது, பார்ப்பது என அனைத்துமே தாய்மொழியுடன்தான் தொடர்புடையதாக உள்ளது. பள்ளிக்குள் வந்த பிறகும் ஆசிரியர், நண்பர்கள், தான் சார்ந்திருக்கும் சமூகம் என அனைத்துத் தொடர்புகளும் தாய்மொழி வழியாகவே இருக்கின்றது. குழந்தைகளின் சிந்தனை, செயல்பாடு, அறிவுத் திறன் அனைத்தும் தாய்மொழி வழியாகவே மேம்படுகிறது. ஆகவேதான் குழந்தைகளுக்கு தாய்மொழி வழிக் கல்வி அவசியமாகிறது .

ஐரோப்பிய நாடுகள் முழுமையும், சீனா, ஜப்பான், கொரியா, இந்தோனேசியா, தென் அமெரிக்கா நாடுகள் மற்றும் பல மொழிகள் பேசும் சிறு சிறு தீவுகள் கூட தாய்மொழி வழிக் கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அறிவியல் ஆய்வுகளின்படியும் குழந்தை உளவியல் சார்ந்தும் தாய்மொழிக் கல்விதான் அடிப்படை வகுப்புகளில் அவசியமானது என்பது புலனாகிறது.

தாய்மொழியில் ஆழமான புலமை பெறுபவர்களால் பன்மொழிப் புலமை பெற்றவராக மாற முடிகிறது. தாய்மொழிக் கல்வியில் ஒரு குழந்தை தெளிவுற, கற்றலை மேற்கொள்வதைத் தொடர்ந்து எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் திறம்படக் கற்க முடியும். தன் சமூகம் சார்ந்த, பண்பாடு சார்ந்த ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில்தான் ஒவ்வொருவரின் சிந்தனையும் தெளிவு பெறும். வேறெந்த மொழியில் ஒருவர் திறம் பெற்றவர்களாக இருந்தாலும் அவரது மூளை எந்த ஒரு தகவலையோ செயலையோ முதலில் தாய் மொழியில்தான் சிந்திக்கும். பிறகு வேறொரு மொழியுடன் இணைப்பை ஏற்படுத்தித் தொடரும் என்பது அறிவியல் நிரூபணம்.

பள்ளிப் படிப்பில் நம் தாய்மொழியான தமிழ் மொழியை ஐந்து பாடங்களில் ஒன்றாக எண்ணாமல், நமது அடையாளமாகப் பார்க்க வேண்டும். அதன் பழமையும் பெருமையும் பண்பாட்டுத் தளத்தில் அதற்கே உரிய இடமும் என பல கோணங்களில் அதை அணுகுவதற்கான மனநிலையை பள்ளிக் கல்வியின் வழியேதான் பெற முடியும். அதன் வழியே பெறும் அனுபவம், திறன்கள்தான் மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ள, நேசிக்கத் தேவையான சூழலையும் உருவாக்கித் தரும். தாய்மொழி வழிக் கல்வி குறித்து மிகப் பெரிய உரையாடலை மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் உருவாக்க வேண்டும்.

தாய்மொழி வழிக் கல்வியால்தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும். படைப்பாற்றல் வேர் விட ஆரம்பித்து, தான் வாழும் சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாய்மொழி கல்வியை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு பள்ளியிலும் அனைத்துக் குழந்தைகளும் உதய கீர்த்திகளாக்களாக உருவாக முடியும்.

- சு.உமாமகேஸ்வரி
அன்பாசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x