Published : 21 Feb 2020 10:47 AM
Last Updated : 21 Feb 2020 10:47 AM

அறம் செய்யப் பழகு: 14 - மாதவிலக்கான பெண்கள் தீட்டானவர்களா?

பிரியசகி

பெண் விடுதலை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள் குறித்து ஊருக்கு உபதேசம் செய்யும் வாய்ச்சொல் வீரர்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து தன்ராஜ் குடும்பத்தினர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு பெண்களின் மாதவிடாய் பற்றித் திரும்பியது.

கீர்த்தி: அம்மா போனவாரம் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் பற்றி சயின்ஸ் மாஸ்டர் கிளாஸ் எடுத்திட்டு இருந்தப்போ பெண்களுக்கு மாதவிடாய் ஏன் வருதுன்னு விளக்கத் தொடங்கியதும் சில பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுன்னுபேசி சிரிக்க ஆரம்பிச்சாங்க. சார் அவங்களக்கூப்பிட்டு இதெல்லாம் நீங்க கண்டிப்பா அறிவியல்பூர்வமா தெரிஞ்சுக்கணும்னுதான் பாடபுத்தகத்துல குடுத்திருக்காங்க. இதுலசிரிக்க என்ன இருக்குனு திட்டினார். பிறகுபீரியட்ஸ் ஏன் வருது?, அதுக்கு என்னென்ன ஹார்மோன்கள் காரணம்? குழந்தை உருவாவது எப்படி? என்பதை எல்லாம் ஸ்மார்ட் போர்டுல வீடியோ போட்டு விளக்கினார்.

சுதாகர்: பரவாயில்லையே! உங்க சார் ரொம்ப நல்லவர். எங்க சார் இந்தப் பாடமெல்லாம் நீங்களே படிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டார்.

தன்ராஜ்: சில ஆசிரியர்கள் இப்படிதான் தப்பு பண்றாங்க. இதையெல்லாம் ஆசிரியர்கள் அறிவியல்பூர்வமா சொல்லித்தரலன்னா பசங்க ஆர்வக்கோளாறுல தவறான தகவல்களை நண்பர்கள் மூலமோ அல்லது இணையதளங்கள் மூலமோ தெரிஞ்சிக்குவாங்க. அது மோசமான பின்விளைவுகளைத் தரும்.

சுதாகர்: அம்மா, பீரியட்ஸின் போது வரும்ரத்தம் சுத்தமானதாம்மா?

ராணி: ஆமாப்பா, அதிலென்ன சந்தேகம்?சுதாகர்: அப்ப அதை ரத்தம் தேவைபடுறவங்களுக்கு ஏத்த முடியுமா?

கீர்த்தி: அடப்பாவி! (சிரிக்கிறாள்)

ராணி: கீர்த்தி, அவனுக்குப் புரியாததாலதான் அவன் கேக்குறான். மத்தவங்க கேள்விகேட்கும்போது நாம சிரிச்சா அப்புறம் கேள்வி கேக்குறதையே நிறுத்திடுவாங்க.

கீர்த்தி: சாரிம்மா.

ராணி: சுதாகர், பருவமடைந்த பெண்கள்எல்லோருக்கும் ஒவ்வொரு மாதமும் சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை சினைக்குழாய்க்கு வரும். இது ஆணின்உயிரணுவோடு சேர்ந்தால்தான் கருப்பையில்குழந்தையா உருவாகும். கருவுறுதல் நடக்கலைனா கருமுட்டை கருப்பையின் உட்பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரியம் என்ற உள்ளுறையோடு சேர்ந்து கருப்பை வாய் வழியே வெளியே வந்துவிடும். இப்படி ரத்தம் வர்ரதைத்தான் பீரியட்ஸ்னு சொல்றோம். இந்த ரத்தம் சுத்தமானதா இருந்தாலும் கருமுட்டை, எண்டோமெட்ரியம் எல்லாம் சேர்ந்து வர்ரதால் அதை தானம் செய்ய முடியாது.

கீர்த்தி: அம்மா எனக்கொரு சந்தேகம், அது சுத்தமான ரத்தம்னா, அதை ஏன் தீட்டுன்னு சொல்றாங்க?

ராணி: ஒருவேளை பழையகாலத்துல பீரியட்ஸ் டைம்ல பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும்னு நினச்சு தனியா உட்கார வெச்சிருக்கலாம்; அது பின்னாடி தொட்டா தீட்டுனு மூடநம்பிக்கையா மாறி இருக்கலாம். நான் சின்னப்பொண்ணா இருந்தப்போ அந்த மூணு நாளும் தீட்டுன்னு கொல்லப்பக்கத்துல தனியா உட்கார வெச்சிடுவாங்க.அப்பல்லாம் ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். இப்ப பெண்கள் ஸ்கூல், காலேஜ், வேலைனு மட்டுமில்லாமல் விண்வெளிக்கெல்லாம் போறாங்க. பெரும்பாலான வீடுகள்ல இந்த மூடப் பழக்கத்தை எல்லாம் விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.

தன்ராஜ்: நம்மைப்போலவே மத்தவங்களும் மாறி இருப்பாங்கன்னு நீ நினைக்குற, ஆனா இன்னைக்கும் மாதவிடாய் காலத்துல பெண்களைத் தனியே ஒதுக்கி வெக்குற பழமைவாதிங்க இருக்காங்க. குஜராத்துல ஒரு கல்லூரி விடுதியிலேயே பெண்களை மாதவிடாயின்போது தனியா ஒரு அறைலதான் தங்க வைப்பாங்களாம். அவங்க மத்தவங்களை தொடக்கூடாது, தொட்டா தீட்டுன்னு ஒதுக்குறாங்கன்னு சமூக வலை தளங்களில் பரபரப்பா பேசப்பட்டது.

ராஜா: இந்த நவீன உலகத்துல இப்படியெல்லாமா இருக்காங்க? அதுவும் ஒரு கல்லூரியில இப்படி நடந்துக்குறாங்கன்னா மகா கேவலம்.

கீர்த்தி: அப்ப இந்த மாதிரி ஆளுங்கதான் முள்கரண்டியில நரமாமிசம் சாப்பிடுறவங்க, சரியா தாத்தா?

தன்ராஜ்: ஆமா, மாதவிலக்கு என்பதுபெண்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமானஅடையாளம். அதனால பெண்களும் மாதவிலக்கு குறித்து வெட்கப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. மத்தவங்களும் பெண்களை அந்த நாட்கள்ல தீட்டுனு ஒதுக்குறதோ, தனிமைப்படுத்துறதோ தவறு.அது அவங்களோட அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும். அது சரியானதும் இல்ல, நாகரீகமானவங்க செய்யக் கூடியதுமில்ல.

(தொடரும்)

கட்டுரையாளர்: நிறைவகம் டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x