Published : 21 Feb 2020 10:34 AM
Last Updated : 21 Feb 2020 10:34 AM

அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலேயே அதிக அளவில் அதிகாரம் படைத்த நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக, வாஷிங்டனில் உள்ள 'ஃபெடரல் சர்க்கியூட் கோர்ட்' எனப்படும் ‘அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம்’தான் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்பவரை அமெரிக்க அரசு பிப். 12-ம் தேதி நியமித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்

ஸ்ரீ ஸ்ரீநிவாசன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரதுதந்தையான பத்மநாப ஸ்ரீநிவாசன், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர். பத்மநாப ஸ்ரீநிவாசன் தனது மனைவியுடன் பணிநிமித்தமாக சண்டிகருக்கு குடிபெயர்ந்தார்.அங்குதான் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் பிறந்துள்ளார். பின்னர், அவர்களின்குடும்பம் அமெரிக்காவின் கேனாஸ் மாகாணத்தில் உள்ள லாரன்ஸ் நகருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே குடிபெயர்ந்தது.

ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அங்கேயே தனதுபள்ளிப் படிப்பையும், சட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக அவர் பணியாற்றினார்.

பதவி உயர்வு

அமெரிக்க அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் (அரசு வழக்கறிஞர்) பணியாற்றியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக,கலிபோர்னியா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்த அவர், தற்போது அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில்தான், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன்மூலம், அந்த நீதிமன்றத்தின் உயர் பதவியில் அமரும் தெற்காசியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை நிவாசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x