Published : 21 Feb 2020 10:11 AM
Last Updated : 21 Feb 2020 10:11 AM

நாகப்பட்டினம் அருகேயுள்ள ஒரத்தூர் நடுநிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்: பிரான்ஸ் தம்பதியினர் திறந்துவைத்தனர்

நாகை அருகேயுள்ள ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை பிரான்ஸ்தம்பதியினர் திறந்துவைத்தனர்.

நாகப்பட்டினம் ஒன்றியம் ஒரத்தூரில் அமைந்துள்ளது சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில், கஜா புயலால் சிதிலமடைந்த வகுப்பறை கட்டிடத்துக்கு பதிலாக புதியகட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து,புதிய கட்டிடத் திறப்பு விழா பள்ளிதலைமை ஆசிரியர் சிவா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிடியர் கேசஸ், அவரது மனைவி இங்கிரிட் கேசஸ் ஆகியோர் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் நாகை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராமலிங்கம், புகழேந்தி, வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலர் சிவக்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் மு.லெட்சுமி நாராயணன், மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், தேசிய நல்லாசிரியர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வகுப்பறைகளுக்கு மேஜை, நாற்காலிகள் வாங்குவதற்கு காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் இளமாறன் தனது பங்களிப்பாக நிதியுதவி வழங்கினார். ஸ்மார்ட்கிளாஸ் தொடங்குவதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாக ஒரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் உறுதியளித்தார். வகுப்பறைகளுக்கு தேவையான மின்விசிறிகள் பொருத்துவதற்கான செலவை நாகைஒன்றியக் குழு உறுப்பினர் ஜானகி குணசேகரன் ஏற்றுக்கொண்டார்.

‘நாளை’ என்ற அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. இதில் தமிழக கிராமப்புற உணவு வகைகளை பிரான்ஸ் நாட்டினர் ருசித்துச் சாப்பிட்டனர். ஆசிரியர் பாலசண்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியர் சுப.சம்பந்தம் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x