Published : 21 Feb 2020 09:41 AM
Last Updated : 21 Feb 2020 09:41 AM

பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: தமிழக தேர்வுத் துறை விளக்கம்

‘‘பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகப் பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல்தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரிகள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்துவித பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக் கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத் தேர்வைசராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால், அரசு, அரசுஉதவி பள்ளிகளில் ஒரு லட்சம்முதுநிலை ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். இவர்களை கொண்டுபொதுத் தேர்வை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க முடியாது.அதனால், அரசு, அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்களை போலதகுதியான தனியார் பள்ளி ஆசிரியர்களும் பொதுத்தேர்வு வேலைகளில் பயன்படுத்தப்படுவார்கள்.

அதேநேரம் அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் உட்பட குறிப்பிட்ட பணிகளே அவர்களுக்கு வழங்கப்படும். முதன்மை கண்காணிப்பாளர், மையங்களை மேற்பார்வையிடுதல், விடைத்தாள் மற்றும் வினாத்தாளை எடுத்துச் செல்லுதல் போன்ற முக்கிய பணிகளுக்கு அரசு, அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவார்கள். அனைத்து பணிநியமனங்களும் மிகவும் வெளிப்படையாக உரிய விதிகளின்படியே நடைபெறும். இது வழக்கமான நடைமுறைதான்.

கடந்த வாரம் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் முதன்மை கண்காணிப்பாளர் பணிக்குதான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று அறிவுறுத்தினோம். அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம். இவ்வாறு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x