Published : 21 Feb 2020 09:35 AM
Last Updated : 21 Feb 2020 09:35 AM

குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பித்தால் சிந்தனை மேம்படும்: குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

‘‘குழந்தைகளுக்கு கல்வியின் ஆரம்பகட்ட நிலையில் தாய்மொழியில் கல்வி கற்பித்தால் அவர்களின் மனம் சிந்தனையின் வளர்ச்சி மேம்படும்’’ என்று குடியரசுத் துணைத் தலைவர் அறிவுறுத்தினார்.

கடந்த 1952-ம் ஆண்டு, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர்தாகாவில் வங்க மொழியை ஆட்சி மொழியாக்க கோரி பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.போராட்டத்தை ஒடுக்க நினைத்து,அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர்.

இதன் நினைவாக 1998-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதியன்று கனடாவில் வசிக்கும் வங்கதேசத்தை சேர்ந்த ரபீகுல் இஸ்லாம் என்பவர் அன்றைய ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னானிடம் உலக மொழிகளை அழிவில் இருந்து காப்பாற்ற சர்வதேச தாய்மொழி தினத்தை அறிவிக்குமாறு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி ஐ.நா.வின் 30-வது மாநாட்டின் போது, வங்க மாணவர்கள் நினைவாக சர்வதேசதாய்மொழி தினம் அனுசரிக்கப்படவேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது. தாய்மொழிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த மாணவர்களின் நினைவாக 2000-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் சர்வதேச தாய்மொழி தின விழா நேற்று தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

மொழி என்பது வெறும் கருத்தை பகிர்ந்து கொள்ளும் கருவி இல்லை. மொழி என்பது தேசத்தின் கலாச்சாரத்துடன் மக்களின் வாழ்க்கையை வடிவமைத்து, முன்னேற்றத்துக்கு அடித்தளத்தை அமைக்கிறது. கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் கண்களுக்கு புலப்படாத ஒரு நூல் போன்றதுதான் மொழி. நமது தனித்துவமான மற்றும் வளமான மொழியியல் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். தாய்மொழியை கொண்டாடுவதை ஒரு நாளைக்குள் சுருக்கி விடக்கூடாது. அதை தினமும் கொண்டாடவேண்டும்.

உலக அளவில் 40 சதவீத மக்கள்,தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் உள்ள இந்திய மொழிகளால் அரசு நிர்வாகத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவர முடியும். மொழியால் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை மையமாக்க முடியும்.

இனி வரும் காலங்களில் அதிகப்படியான மக்கள் தங்கள் தாய் மொழியை வீட்டிலும், சமூகத்திலும், பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகத்திலும் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தாய் மொழியில் பேசுவோர், எழுதுவோர் மற்றும் தொடர்பு கொள்பவர்களுக்கு நாம் கண்ணியத்தையும் மரியாதையும் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியின் ஆரம்பகட்ட நிலையில் தாய்மொழியில் கல்வி கற்பித்தால் அவர்களின் மனம் சிந்தனையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகம்அளிக்கிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிப்பதன் மூலம் அவர்களை ஆக்கபூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் ஆக்குகிறது என்று நிபுணர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

சர்வதேச தாய்மொழி தினத்தைமுன்னிட்டு, அனைத்து மொழிகளையும் பாதுகாக்கும் நோக்கில், இன்று நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த தினத்தில் சொற்பொழிவு, விவாதம், பாட்டு, கட்டுரை, ஓவியம், இசை, நாடகம், கண்காட்சிகள் என பல்வேறு வடிவங்களில் தாய்மொழியைக் கொண்டாட உள்ளனர்.

மேலும், இதர இந்திய மொழிகளின் கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் மொழி ஆர்வலர்கள் சார்பில் பிரத்யேக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x