Published : 20 Feb 2020 10:15 AM
Last Updated : 20 Feb 2020 10:15 AM

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்சுனில் குமார் தங்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கப் பதக்கம் பெற் றார். இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடினோவை அவர் வென்றார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 87 கிலோகிராம் கிரெகோ ரோமன் மல்யுத்தபோட்டியின் இறுதி ஆட்டத்தில்கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடினோவை எதிர்த்து சுனில் குமார் மோதினார். இப்போட்டியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் சுனில் குமார் வென்றார்.

இதன்மூலம் இப்போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய மல்யுத்த போட்டியில் கிரெகோ ரோமன் பிரிவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1993-ம் ஆண்டில் பப்பு யாதவ் என்பவர் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இப்போட்டியில் பதக்கம் வென்றதைப் பற்றி கருத்து தெரிவித்த சுனில் குமார், “இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

முன்னதாக 55 கிலோகிராம் எடைப்பிரிவில் நடந்த மல்யுத்த போட்டியில், இந்தியாவின் அர்ஜுன் ஹலகுர்கி வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் கொரிய வீரரான டோங்கியோக்கை 7-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

-பிடிஐ

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: கராச்சி நகரில் இன்று தொடக்கம்

கராச்சி

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கராச்சி நகரில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுமார் ஒரு மாதகாலம் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி, கராச்சி நகரில் இன்று தொடங்குகிறது. டேல் ஸ்டெயின், ஷேன் வாட்ஸன், கிறிஸ் லின், கார்லோஸ் பிராத்வெயிட், ஜேசன் ராய் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடட், கராச்சி கிங்ஸ், லாகூர் குவாலேண்டர்ஸ், லுடான் சுல்தான்ஸ், பெஷாவர் சால்மி, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியின் இறுதி ஆட்டம் மார்ச் 22-ம் தேதி லாகூரில் நடக்கிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இத்தொடர் முழுமையாக பாகிஸ்தானில் நடக்கவுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் முழுமையாக பாகிஸ்தானில் நடப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x