Published : 20 Feb 2020 08:12 AM
Last Updated : 20 Feb 2020 08:12 AM

தாமதமாக பள்ளிக்கூடம் தொடங்கினால் விபத்துகள் குறைவதாக ஆய்வில் தகவல்

பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தைத் தாமதப்படுத்தினால் வாகனம் ஓட்டும் விடலை பருவத்தினர் விபத்தில் சிக்குவதைக் குறைக்க முடியும் என்கிறது புதிய ஆய்வு. இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு.

மோட்டார் வாகனம் ஓட்டும் பதின்பருவத்தினர் விபத்தில் சிக்குவது குறித்து அமெரிக்காவின் வெர்ஜீனியாமாகாணத்தில் உள்ள சில பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த வயதினர் எத்தகைய நேரத்தில் விபத்தில் சிக்குகிறார்கள் என்பதை ஆய்வு செய்தபோது, பெரும்பாலும் காலையில் பள்ளிக்கு அரக்கப்பறக்கக் கிளம்பி வண்டி ஓட்டும்போது ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சில பள்ளிக்கூடங்களின் பள்ளி நேரம் மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகள் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2015-ம் ஆண்டில் இந்த திட்டம் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. அதுவரை காலை 7:20-க்கு தொடங்கப்பட்ட பள்ளிகள் 2015-ம் ஆண்டில்இருந்து காலை 8:10-க்கு தொடங்கப்பட்டன. இந்த 50 நிமிடங்கள் ஏற்படுத்திய மாற்றம் மிகப் பெரியது என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். ‘கிளினிக்கல் ஸ்லீம் மெடிசின்’ என்ற அமெரிக்க ஆய்விதழில் இந்த கட்டுரை வெளியாகி இருக்கிறது.

இது குறித்து அமெரிக்காவின் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி:

16-ல் இருந்து 18 வயது வரையிலான வாகன உரிமம் பெற்ற வாகன ஓட்டுநர்களில் விபத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2015-க்கு பிறகு குறிப்பிடத்தகுந்த சதவீதம் குறைந்தது. ஆரம்பத்தில் ஆயிரம் ஓட்டுநர்களில் 31.63 பேர்விபத்துக்கு உள்ளாகும் நிலையில் இருந்தது. பிறகு 29.59 ஆக குறைந்தது. பள்ளிக்கூட நேரத்தில் மாற்றம் அமல்படுத்தாத இதர மாகாணங்களில் பதின்பருவத்தினரின் வாகன விபத்துக்களில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்தபாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜூடித் ஓவன்ஸ் கூறுகையில், “அமெரிக்க இளம் சிறார்களின் மரணத்துக்கு மிக முக்கியகாரணமாக இருப்பது வாகன விபத்தாகும். இதை தடுப்பதற்காகவே பள்ளி நேரத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசியம் இங்கு உள்ளது. முக்கியமாக அதிகாலையில் பள்ளியைத் தொடங்குவதற்கு பதில் சிறிது தாமதமாகத் தொடங்கும் போது மாணவர்கள் நன்கு உறங்கிய பிறகு உற்சாகமாகப் பள்ளிக்கு செல்ல முடிகிறது.

அதேபோல வாகனம் ஓட்டும் மாணவர்கள் முறையாக சீட் பெல்ட் அணிதல், பதற்றம் தணிந்து வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்டவை சாத்தியமாகிறது. இதுபோக வகுப்பறையிலும் கவனச்சிதறல் இன்றி பாடங்களைக் கவனிக்கும் போக்கு அதிகரிப்பதையும் பார்க்க முடிந்தது. பள்ளிக்கூடங்கள் அதிகாலையில் தொடங்கப்படும்போது மாணவர்கள் உறங்க வேண்டிய நேரத்தில் அடித்து பிடித்து கிளம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுவே பள்ளி நேரத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் போது மாணவர்களுக்குப் பல மைகள் விளைவது இதில் தெரியவந்துள்ளது.”

இவ்வாறு ஆராய்ச்சியாளர் ஜூடித் ஓவன்ஸ் தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x