Published : 19 Feb 2020 11:27 AM
Last Updated : 19 Feb 2020 11:27 AM

கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்

கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று வூஹான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வூஹான் மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வுஹான் மாகாணம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ''மருத்துவ ஊழியர்கள் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்கள் இன்னும் தீவிரமாக வைரஸுக்கு எதிராகப் பணியாற்ற உற்சாகப்படுத்தும் வகையில், சீனாவின் மாகாண ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். மழலையர் கல்வியைத் தொடங்கும் இளம் குழந்தைகளுக்கு சேர்க்கையின்போது முன்னுரிமை அளிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுவது தவறு. இது சமத்துவமில்லாத கல்விக்கு அடித்தளம் வகுக்கும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x