Published : 19 Feb 2020 10:50 AM
Last Updated : 19 Feb 2020 10:50 AM

93 வயதில் முதுகலைப் பட்டம்: அமைச்சர் பாராட்டிய தமிழரின் வெற்றிக் கதை!

மனைவி படுத்த படுக்கையாக இருந்த நிலையில், மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் உள்ள சூழலில் 87 வயதில் தனது பட்டப் படிப்பைத் தொடங்கிய இளைஞர் சிவசுப்பிரமணியம் தனது 93-வது வயதில் மத்திய அமைச்சர் கையால் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 90 வயது இளைஞர் என்று சிவசுப்பிரமணியத்தைப் பாராட்டியுள்ளார்.

யார் இந்த முன்னுதாரண இளைஞர்?

தமிழகத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் 1940களில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார். தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டவருக்கு திருச்சி அல்லது சென்னை செல்ல வேண்டிய நிலை. தாய், தந்தையரின் உடல்நிலை மோசமானதால், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சிவசுப்பிரமணியத்துக்கு வந்தது. சொந்த ஊரிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்தவர், அங்கிருந்தே பெற்றோரைக் கவனித்துக் கொண்டார்.

சில வருடங்களில், டெல்லிக்குக் குடிபெயர்ந்தார் சிவசுப்பிரமணியம். மத்திய அரசின் வர்த்தகத் துறையில் குமாஸ்தா பணி கிடைத்தது. அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தும் பட்டதாரியாக இல்லாததால், போக முடியாத நிலையை வருத்தத்துடன் நினைவுகூர்கிறார் சிவசுப்பிரமணியம்.

தொலைதூரக் கல்வி படிக்க ஒருமுறை வாய்ப்பு கிடைத்தும் பணியிட மாற்றத்தால் அவரால் படிக்க முடியாமல் போனது. தொடர்ந்து துறைத் தேர்வுகளை எழுதிக் கொண்டே வந்த சிவசுப்பிரமணியம் ஓய்வு பெறும்போது துறையின் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருந்தார். என்றாலும் பட்டதாரியாக வேண்டும் என்ற அவரின் ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.

பணி ஓய்வுக்குப் பிறகும் குடும்பச் சூழல் காரணமாகப் படிக்க முடியவில்லை. சிவசுப்பிரமணியத்தின் 87-வது வயதில், அவரின் மனைவி படுத்த படுக்கையானார். அவரைத் தினசரி பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார் சிவசுப்பிரமணியம். அவரின் மனைவிக்கு பிஸியோதெரபிஸ்ட் ஒருவர் தினசரி பயிற்சிகள் அளித்து வந்தார். இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்புக்கு விண்ணப்பிக்க சற்று முன்னதாகக் கிளம்ப வேண்டும் என்றுகூறி பிஸியோதெரபிஸ்ட் அனுமதி கேட்டார். அப்போது தானும் அங்கு படிக்க முடியுமா என்று சிவசுப்பிரமணியம் கேட்டார்.

இக்னோவில் படிக்க வயது ஒரு தடையில்லை என்று தெரிந்தவுடன் பொது நிர்வாகவியல் படிப்புக்காக விண்ணப்பித்தார். படித்து முடிக்கும் வரை உயிருடன் இருப்பேனா என்று தெரியாது என்று தனது குழந்தைகளிடம் சொன்ன சிவசுப்பிரமணியம் வெற்றிகரமாக இளங்கலை முடித்து முதுகலைப் படிப்புக்கும் விண்ணப்பித்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 5 மணிக்கு எழும் அவர், படிப்பில் ஆழ்ந்துவிடுகிறார். வயது காரணமாக கையெழுத்து மாறிவிட்டதால், அவரின் மகள் அசைன்மென்ட் எழுதிக் கொடுக்கிறார். தேர்வுகளின்போது உடன் சென்று தேர்வையும் எழுதிக் கொடுக்கிறார்.

நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
சிவசுப்பிரமணியம் இளங்கலைப் பட்டம் பெற்றபோது மனைவி தனது கடைசிக் காலகட்டத்தில் இருந்தார். மனைவியிடம் கொண்டுபோய் பட்டத்தைக் கொடுத்தவர், ''கடைசியாக, உன் கணவன் பட்டதாரி ஆகிவிட்டேன்!'' என்று கூறியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களில் மனைவி காலமானார்.

தனது வருங்காலத் திட்டங்கள் குறித்து உற்சாகத்துடன் பேசும் அவர், ''எனக்கு எம்.பில். படிக்க ஆசை. ஆனால் என் மகள், நீங்கள் விண்ணப்பித்தால் உடனே இடம் கிடைத்துவிடும். அதனால், இன்னொருவரின் வாய்ப்பைப் பறிக்க வேண்டாமே என்று கேட்டுக்கொண்டார்.

அதனால் வேறு ஏதாவது முதுகலைப் பட்டத்தைப் படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் இந்த 93 வயது இளைஞர்.

முயற்சிக்கும் வெற்றிக்கும் வயது ஒரு தடையே இல்லை என்று இளைஞர்களுக்கும் சேர்த்து உரக்கச் சொல்கிறார் சிவசுப்பிரமணியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x