Published : 19 Feb 2020 08:34 AM
Last Updated : 19 Feb 2020 08:34 AM

ஆசிரியருக்கு அன்புடன்! - 16: சர்வாதிகாரம் என்றால் என்ன?

ரெ.சிவா

ஜெர்மனி நாட்டில் ஒரு பள்ளியில் செயல்திட்டங்கள் வாரம். இளம் ஆசிரியர் வெங்கர், சர்வாதிகாரம் என்ற தலைப்பில் ஒரு செயல்திட்டத்தை வழிநடத்த விரும்புகிறார். அது குறித்த விவாதத்தை வகுப்பறையில் தொடக்குகிறார்.

“சர்வாதிகாரம் என்றால் என்ன?” என்று வெங்கர் கேட்கிறார். பதில் ஏதுமில்லை. மாணவர்களிடையே சலசலப்பு. “சர்வாதிகார ஆட்சி என்றால்?” என்று கேட்கிறார். முடியாட்சி போல அதுவும் ஒன்று என்று ஒரு மாணவர் கூறுகிறார். தனி நபரோ அல்லது சிறு குழுவோ அதிகமான மக்களை ஆட்சி செய்வது என்று நினைக்கிறேன் என்றொரு மாணவி கூறுகிறார்.

ஹிட்லரை பற்றி ஏன் பேசணும்?

இது சரியாக இருக்கிறது. கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல் இது. தனது- அதிகாரம்- ஆட்சி என்று சொல்லலாம். சர்வாதிகார ஆட்சியில் ஒருவர் அல்லது சிறு குழுவிடம் அளவற்ற அதிகாரம் குவிந்திருக்கும். சட்டத்தை அவர்கள் இஷ்டம் போல் மாற்றிக்கொள்வார்கள்.

“இதற்கு ஏதேனும் உதாரணம் சொல்ல முடியுமா?” என்று வெங்கர் கேட்கிறார். ஹிட்லரின் ஆட்சி என்று ஒரு மாணவர் கூறுகிறார். அதையே ஏன் பேச வேண்டும் என்று ஒரு மாணவர் சலிப்புடன் கூறுகிறார்.

நீங்கள் தான் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இந்த வாரம் முழுவதும் நாம் சர்வாதிகாரம் குறித்தே கலந்துரையாடப் போகிறோம்.உங்களுக்காக இது குறித்துச் சில செய்திகளை இந்தத் தாள்களில் வாசிக்கலாம் என்று வெங்கர் கூறுகிறார்.

இதையே எத்தனை முறை வாசிப்பது என்று ஒரு மாணவர் சலித்துக் கொள்கிறார். இது பேசவேண்டிய முக்கியமான செய்தி என்று ஒரு மாணவி கூறுகிறார். நாஜிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். இனி அப்படி நடக்கப்போவது கிடையாது. என்று அந்த மாணவர் கூறுகிறார். புதிய நாஜிக்கள் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருப்பதை நீ அறியவில்லையா என்று மாணவி கூறுகிறார்.

மாற்றப்படும் இருக்கைகள்

இந்தப் பேச்சு நமக்குள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா என்று மாணவர் கேட்கிறார். இது குற்ற உணர்வுக்காக அல்ல. வரலாற்றுக் கடமை என்று மாணவி கூறுகிறார். சிலர் இது குறித்து மேலும் பேசுகிறார்கள். இனிமேல் நமது நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சி வராது என்று நம்புகிறீர்களா என்று ஆசிரியர் கேட்கிறார்.

வராது என்றுதான் நினைக்கிறோம் என்று கூறினாலும் வகுப்பறைக்குள் சற்றே குழப்பமும் சூழ்கிறது. இடைவேளைக்குப் பிறகு பேசலாம் என்கிறார் ஆசிரியர்.

மாணவ மாணவியர் திரும்பி வரும்போதுவகுப்பறையில் வட்டமாக அமரும் இருக்கைகள் வரிசையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. வகுப்பறைக்குள் அதிக இடம் கிடைக்கும் என்பதால் இருக்கைகளை மாற்றியுள்ளேன் என்று ஆசிரியர் கூறுகிறார்.

நான் ஆணையிட்டால்!

கலந்துரையாடல் தொடர்கிறது. “சர்வாதிகார அமைப்பிற்கு அடிப்படையாக என்ன தேவை?” ஒரு சர்வாதிகாரி. வல்லமையான தலைவன் என்று ஒரு மாணவர் கூறுகிறார். சரிதான். சர்வாதிகாரத்திற்கு ஒரு மையப்பாத்திரம் அவசியம்.

உங்களுள் ஒருவரே தலைவராக இருக்கலாமே என்று ஆசிரியர் சொல்லுகிறார். ஓரிருவர் தலைவராக ஆர்வம் காட்டுகின்றனர். சரி. அதிகப்பேர் வாக்களிக்கும் நபரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆசிரியர் சொல்லுகிறார்.

வாக்கெடுப்பில் ஆசிரியரே தலைவராக இருக்கவேண்டும் என்று அதிகப்பேர் வாக்களிக்கின்றனர். “இந்த வாரம் முழுவதும் நமது செயல்திட்டம் சர்வாதிகாரம். என்னையே நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். எனவே நான் சொல்லுவதை அனைவரும் அப்படியே பின்பற்ற வேண்டும்” என்று ஆசிரியர் கூறுகிறார்.

இனி யாரும் எனது அனுமதி இல்லாமல் வகுப்பறையில் பேசக்கூடாது. யாரவது பேசவேண்டும் என்றால் முதலில் எழுந்து நிற்க வேண்டும்.

என்று ஆசிரியர் சொன்னதும் மாணவரிடையே கேள்வி எழுகிறது. ஒரு மாணவி எழுந்து, “ஏன் எழுந்து நின்று கேள்வி கேட்கவேண்டும்?” என்று கேட்கிறார்.

எழுந்து நிற்பதால் சுறுசுறுப்பு கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும். கவனம் மேம்படும். இப்போது உட்கார் என்று ஆசிரியர் கூறுகிறார்.அனைவரும் எழுந்து நின்று மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று ஆசிரியர் கூறுகிறார்.

மூளைச்சலவை செய்யும் திட்டம்

அவர்களுக்கான சீருடை, முத்திரை, வணக்க முறை உருவாக்கப்படுகிறது. வேவ்(Wave) என்று பெயர், ஒரே குழு, நமக்குள்ஒற்றுமை என்று சட்டங்கள் வலிமையாகின்றன. ஊரெங்கும் தங்களது முத்திரையைப் பதித்தல், தலைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல், குழு உறுப்பினருக்குப் பிரச்சினைகள் எனில் உதவுதல், புதிய உறுப்பினர் சேர்க்கை என்று குழு மனப்பான்மை வலுவடைகிறது.

வார இறுதியில் வேவ் குழுவினர் மத்தியில் பேசும்போது இப்படித்தான் சர்வாதிகாரம் மக்களை மூளைச்சலவை செய்கிறது என்றுஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். அவரின்மெய்காப்பாளனாகத் தன்னை எண்ணிக்கொண்ட மாணவன் மிகவும் வருந்தி அழுகிறான். பலரும் அதிர்ச்சி அடைகின்றனர். சிலர் அழுகின்றனர். நம்மை அறியாமலேயே ஆசிரியரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததை உணர்கின்றனர்.

சர்வாதிகாரியின் கொடும் செயலுக்கு எவ்வாறு மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்று ஒரு மாணவர் கேட்ட கேள்விக்காக ஆசிரியர் உருவாகிய செயல்திட்டம் வேவ். இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து ’தி வேவ்’ என்ற ஜெர்மானியப் படம் 2008-ல் எடுக்கப்பட்டது.

வரலாறு என்பது வருடங்களையும் பெயர்களையும் மனப்பாடம் செய்வது என்று நமது கல்வி மாறியுள்ளது. தகவல் தொகுப்பாகப் புத்தகங்கள் பெரியதாக இருக்கின்றன. வரலாற்றில் இருந்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிகாட்டும் பாடங்களும் செயல்பாடுகளுமே கற்றுக்கொள்ளத் தேவையானவை.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x